போலீஸ் அதிகாரிகள் மாற்றம்: அமைச்சர்கள் அதிர்ச்சி!

Published On:

| By Balaji

சில தினங்களாகவே தமிழகத்தில் போலீசார்தான் தலைப்புச் செய்திகளாக மாறி வருகின்றனர். சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு இறந்த நிலையில் அந்த காவல்நிலைய அனைத்து போலீஸார் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கூடவே நேற்று தூத்துக்குடி எஸ்பி அருண் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு, விழுப்புரம் எஸ்பி ஜெயக்குமார் தூத்துக்குடிக்கு புதிய எஸ்பியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தமிழக அரசு நேற்று (ஜூன் 30) நள்ளிரவு அதிரடியாக 39 ஐபிஎஸ் உயரதிகாரிகளை மாற்றியிருக்கிறது. இதில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மட்டுமல்ல, திருப்பூர், மதுரை என தமிழகத்தின் பல்வேறு பகுதி போலீஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இன்று (ஜூலை 1) காலைதான் இந்தத் தகவல் பல அமைச்சர்களுக்கே தெரியவந்து அவர்கள் அதிர்ச்சி ஆகியிருக்கிறார்கள்.

இதுகுறித்து அமைச்சர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது, “பொதுவாகவே இதுபோன்ற பெரிய அளவிலான போலீஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவதற்கு முன்பு முதல்வர் ஏரியா அமைச்சர்களிடம் ஆலோசிப்பது வழக்கமாக இருந்தது. ஏனெனில் தமிழகம் முழுவதிலும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தங்களின் அனுசரனைக்கு ஏற்றவாறு கன்வீனியன்ஸான அதிகாரிகள் பணியில் இருப்பதையே விரும்புவார்கள். கட்சிக்கும் ஆட்சிக்கும் அதுவே சுமுகமாக இருக்கும். அந்த வகையில்தான் இப்போதும் பல மாவட்டங்களில் போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். தேர்தல் வரை இந்த நிலை நீடிக்கவே பல அமைச்சர்களும் விரும்பினார்கள்.

இந்த நிலையில் எந்த அமைச்சரிடமும் ஆலோசனை செய்யாமல், தகவல் கூட தெரியப்படுத்தாமல் அதிரடியாக அதிகாரிகள் மாற்றப்பட்டிருப்பது பல அமைச்சர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையம் செய்வதைப் போன்று அதிரடியாக நடந்திருக்கும் இந்த மாற்றம் எதற்காக என்பதுதான் அமைச்சர்களில் பலர் தத்தமது வட்டாரத்தில் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி” என்கிறார்கள்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share