அன்புமணி மீது ஊழல் வழக்கு இல்லை என்று பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி விளக்கம் அளித்துள்ளார்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற அதிமுகவின் 11 உறுப்பினர்களும், பாமகவின் அன்புமணியும் ஆதரவாக வாக்களித்ததுதான் காரணம் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், ஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்தது திமுகதான் என்றும், தன்னுடன் இது தொடர்பாக ஸ்டாலின் விவாதிக்கத் தயாரா என்றும் ராமதாஸ் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த டி.ஆர்.பாலு, ‘அன்புமணியை ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்றுவதற்காகவே மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்’ என்று குற்றம்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்து நேற்று (டிசம்பர் 19) அறிக்கை வெளியிட்டுள்ள பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, “ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் செய்வதில் திமுக தலைவர்களான கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோருக்குச் சற்றும் சளைக்காதவர்தான் டி.ஆர்.பாலு.இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களைப் படுகொலை செய்த ராஜபக்சேவின் அழைப்பை ஏற்று அவரது மாளிகைக்குச் சென்று சிரித்துப் பேசி விருந்து உண்டு பரிசுப்பெட்டி வாங்கி வந்த எம்.பி.க்கள் கூட்டத்துக்குத் தலைமையேற்றதே இந்த டி.ஆர்.பாலுதான். அந்த வகையில் தமிழின துரோகத்தில் கருணாநிதிக்கு முதல் வாரிசே இவர்தான்” என்று சாடியுள்ளார்.
ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அன்புமணி ராமதாஸைக் காப்பாற்றுவதற்காக ஈழத்தமிழர் உரிமையை ராமதாஸ் காவு கொடுத்து விட்டதாக பாலு பொய் மாலைகளைச் சூட்டியிருக்கிறார் என்று குறிப்பிட்ட ஜி.கே.மணி, “ஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்திருக்கும் திமுகவினரா ஊழல்களைப் பற்றிப் பேசுவது? ஊழலின் ஊற்றுக்கண்ணே திமுகதான் என்பதை உலகமே அறியுமே” என்று சாடியுள்ளார்.
மேலும் இதுதொடர்பாக, “அன்புமணி ராமதாஸ் மீது எந்த ஊழல் வழக்கும் இல்லை. அரசியல் காரணங்களுக்காகத் தொடரப்பட்ட விதிமீறல் வழக்கு தான் இருக்கிறது. அந்த வழக்கிலும் அவர் மீது தவறு இல்லை என்று உச்ச நீதிமன்றம் பல்வேறு தருணங்களில் கூறியிருக்கிறது. அந்த வழக்கை அவர் நேர்மையாக எதிர்கொண்டு வருகிறார். ஆனால், 2ஜி ஊழல் வழக்கிலிருந்து மகளைக் காப்பாற்றுவதற்காக ஒன்றரை லட்சம் அப்பாவி ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய துணை நின்ற திமுகவை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்றும் ஜி.கே.மணி விமர்சித்துள்ளார்.
ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற ராமதாஸின் நிலைப்பாட்டை டி.ஆர்.பாலு விமர்சித்திருப்பதாகக் கூறிய அவர், “இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இன்னொரு நாட்டில் குடியுரிமை பெற்றால் அவரது இலங்கைக் குடியுரிமை தானாகவே பறிக்கப்பட்டு விடும் என்பது அந்நாட்டு சட்டம். இந்தியாவும் இலங்கையும் பேசி ஒப்பந்தம் செய்து கொண்டால்தான் ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க முடியும். அதற்காகத்தான் பாமக பாடுபட்டு வருகிறது. இதுகூட தெரியாமல் பாலு உளறுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்களின் படுகொலைக்குத் துணை போனது திமுக தான். ஈழத்தமிழர்களுக்குத் துரோகம் செய்ததும் திமுக தான். இதுகுறித்து ராமதாஸ் அல்லது அன்புமணி ராமதாஸ் விவாதிக்க மு.க.ஸ்டாலினைக் கெஞ்சி கூத்தாடியாவது டி.ஆர்.பாலு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.�,