பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுவித்தால் அது ஆளுநர் மாளிகைக்கு அவப்பெயரைத் தேடித் தரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது பேரறிவாளனை ஏன் உச்சநீதிமன்றமே விடுவிக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியிருந்தது. அதோடு, அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கு எதிராகவும் மாநில ஆளுநர் செயல்பட்டால் அது கூட்டாட்சி கட்டமைப்புக்கு மிகப்பெரிய பாதகமாகிவிடும் என்று கூறி இவ்வழக்கை வரும் புதன் கிழமைக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில் ஆளுநர் மாளிகையின் மாண்பைக் காக்க 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பேரறிவாளன் வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், 7 தமிழர் விடுதலை குறித்த தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்காததற்காகத் தமிழக ஆளுநர் மாளிகையைக் கடுமையாக விமர்சித்திருக்கிறது. ஆளுநரின் நிலை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்று கண்டித்திருக்கிறது.
உச்சநீதிமன்றம் இப்படி விமர்சிக்கும் நிலையைத் தமிழக ஆளுநர் மாளிகை ஏற்படுத்தியிருக்கக்கூடாது. 7 தமிழர் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகை முன்கூட்டியே முடிவெடுத்திருக்க வேண்டும். ஆளுநர் 4 நாட்களில் சரியான பதிலளிக்கவில்லை என்றால் பேரறிவாளனை உச்ச நீதிமன்றமே விடுதலை செய்யக்கூடும். அப்படி விடுதலை செய்தால் அது ஆளுநர் மாளிகைக்கு அவப்பெயர் தேடித்தரும். அந்த நிலையைத் தவிர்த்து ஆளுநர் மாளிகையின் மாண்பைக் காக்கப் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான கோப்பில் ஆளுநர் உடனடியாக கையெழுத்திட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
**-பிரியா**