qபாஜக வேட்பாளருக்கு எதிராக பாமக போராட்டம்!

Published On:

| By Balaji

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளருக்கு எதிராக, பாமகவினர் ஆர்ப்பாட்டம் செய்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல் ஏ.வும், திமுக முக்கிய நிர்வாகியுமான பொன்முடி போட்டியிடுகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக வேட்பாளராக கலிவரதனை களத்தில் இறக்கியுள்ளார்கள்.

கலிவரதன் ஏற்கனவே பாமகவில் முக்கிய பொறுப்பு வகித்தவர். முகையூர் தொகுதியில் பாமக எம்.எல்.ஏ.வாக இருந்தவர். பாமக தலைமை மீது கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு தலைமையைக் கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு திமுகவில் இணைந்தார். பிறகு பாஜகவில் சேர்ந்த அவருக்கு மாவட்டத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. தற்போது, திருக்கோவிலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டதும், கூட்டணிக் கட்சி என்ற முறையில், பாமக நிறுவனர் ராமதாஸைச் சந்தித்து ஆசி வாங்க தைலாபுரம் தோட்டத்துக்குச் சென்றிருக்கிறார். ஆனால் அவரை சந்திக்க மறுத்துவிட்டார் ராமதாஸ்.

கலிவரதன் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது பத்திரிகையாளர் சந்திப்பில் கட்சிகள் மாறியது பற்றி கருத்துக் கேட்டபோது, “டாக்டர் ராமதாஸும் அதிமுக, திமுக என கூட்டணி வைக்கவில்லையா அதுபோல்தான் இதுவும்” என எதார்த்தமாகப் பேசிவிட்டார்.

இதனால் கோபமான பாமகவினர் பாஜக வேட்பாளருக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். நேற்று முன்தினம் மனம்பூண்டி பகுதியில் பாஜக வேட்பாளருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேர்தல் நெருங்கும் சமயத்தில், ஒரே கூட்டணியில் பாமக மற்றும் பாஜக இருந்தும், இரு தரப்பினரும் ஒற்றுமை இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டது, கூட்டணி கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

**-வணங்காமுடி**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share