பிரேமலதா பச்சைக்கொடி:அதிமுகவுக்கு எதிராக தேமுதிக ஆர்பாட்டம்!

Published On:

| By Balaji

பெட்ரோல் டீசல் விலையேற்றத்தைக் கண்டித்து சென்னை பல்லாவரத்தில் தேமுதிக சார்பில் இன்று (பிப்ரவரி 21) ஆர்பாட்டம் நடைபெற்றது.

மத்திய ஆளுங்கட்சியான பாஜக, மாநில ஆளுங்கட்சியான அதிமுக ஆகிய கட்சிகளுடனான கூட்டணியில் இருப்பதாக கருதப்படும் தேமுதிக….கூட்டணி தர்மம் என்றெல்லாம் பாராமல் மக்களுக்கான பிரச்சினையாக பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கருதி போராட்டக் களத்தில் குதித்திருக்கிறது.

இந்த ஆர்பாட்டத்தின் போது பேசிய தேமுதிகவின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் அனகை முருகேசன் அதிமுக மீதான தனது கோபத்தையும் வெளிப்படையாகவே கொட்டித் தீர்த்துவிட்டார்.

“இன்றைக்கு மக்களுக்கு நன்மை செய்கிறேன் என்று வெளித்தோற்றத்துடன் சொல்கிற எடப்பாடி அரசு மக்கள் விரோத ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. 2011-16 இல் எதிர்க்கட்சியாக இருந்தபோது பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் கேப்டன். அந்த வகையில் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் பெட்ரோல் டீசல் பிரச்சினையால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை மட்டுமல்ல எந்த பிரச்சினையானாலும் சரி மக்கள் பிரச்சினைக்காக தேமுதிக போராடும்.

இன்றைக்கு கூட்டணி பற்றி ஒவ்வொரு செய்தி பரவுகிறது. கூட்டணியில் இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி… கேப்டன் ஆணையிட்டால் 234 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடத் தயார். 234 தொகுதிகளிலும் பொறுப்பாளர்களை நியமனம் செய்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறார். ஐந்து வருடம் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. இந்த தேர்தலில் தேமுதிக தனது பலத்தை நிரூபிக்கும்.

ஏனெனில் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் இருக்கிற கட்சிக்கு மரியாதை கொடுக்கிறார்கள். ஆனால் உரிய மரியாதையை தேமுதிகவுக்கு அதிமுக கொடுப்பதில்லை. தேமுதிக தமிழகத்தில் மூன்றாவது பலம் பொருந்திய கட்சி. ஆனால் எங்களை அதிமுகவினர் அலட்சியமாக நினைக்கிறார்கள். நாங்கள் கூட்டணிக்காக பணிந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. கூட்டணியில் இருந்துகொண்டே போராட்டமா என்று நினைக்கலாம். ஆனால் பெட்ரோல், டீசல் என்பது மக்கள் பிரச்சினை. இது மக்களுக்காக நடக்கிற போராட்டம்.

எங்கள் பொருளாளர் பிரேமலதா அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறார். தமிழகம் முழுக்க ஆலோசனைக் கூட்டங்கள் நடக்கின்றன. எந்த யூகத்துக்கும் தேமுதிக பொறுப்பல்ல. எதையும் நேருக்கு நேர் பேசக் கூடிய இயக்கம் தேமுதிக.

மத்திய மாநில அரசுகள் டீசல், பெட்ரோலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும். ஆனால் இதைச் செய்யாமல் மத்திய அரசு ஆயில் நிறுவனம்மீது பழியைப் போடுகிறார்கள். 15 நாளுக்கு ஒருமுறைதான் ஆயில் நிறுவனம் விலையை உயர்த்த முடியும். ஆனால் தினந்தோறும் விலை ஏறுகிறது. கேஸ்சிலிண்டர் விலை உயர்வால் பெண்கள் உள்ளிட்ட மக்கள் பாதிப்பில் இருக்கிறார்கள்.எனவே இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும்” என்று பேசினார்.

பெட்ரோல், டீசல் பிரச்சினையை பேசியதோடு அதோடு சேர்த்தே அதிமுகவுடனான கூட்டணிப் பிரச்சினையையும் பேசி பாமகவை விட தங்களை குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்ற கோபத்தை மீண்டும் பொதுவெளியில் கொட்டியிருக்கிறது தேமுதிக.

திடீரென அதிமுகவை தேமுதிக கடுமையாக கண்டித்து பேச என்ன காரணம் என்று விசாரித்தோம்.

கூட்டணியில் உள்ள பாமகவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வீடு தேடி சென்று சந்திக்கிறார்கள். நான்கு அமைச்சர்கள் பேசுகிறார்கள். ஆனால் நம்ம கேப்டனை அலட்சியமாக பார்கிறார்கள். சில கோரிக்கைகளை முன்வைத்தோம். அதற்கு இதுவரை பதிலும் இல்லை, பேச்சுவார்த்தைக்கும் வரவில்லை. கேப்டனை சந்திக்கவும் வராமல் அவமானப்படுத்த நினைக்கிறார்கள்.

இதனால் என்ன ஆனாலும் பாத்துக்கலாம் அதிமுகவை ஒரு பிடி பிடிங்க என பிரேமலதா பச்சை கொடி அசைத்ததால்தால், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் அதிமுகவை வறுத்தெடுத்துள்ளார்கள்” என்கிறார்கள் தேமுதிக மூத்த நிர்வாகிகள்.

**-வணங்காமுடி வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share