}பாமக நிர்வாகக் குழு தள்ளி வைப்பு: பின்னணி என்ன?

politics

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு கேட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார். போராட்டம் மூலமும் அறிக்கைகள் மூலமும் அழுத்தம் கொடுக்கும் ராமதாஸ், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் முடிவை அடிப்படையாகக் கொண்டே அரசியல் முடிவும் எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

அதாவது அதிமுக-பாமக கூட்டணி தொடர்வதும் தொடராததும் இந்த வன்னியர் இட ஒதுக்கீட்டு விவகாரத்தைப் பொறுத்தது என்பதே அவரது நிலைப்பாடு. இதுபற்றி ‘அரசியல் முடிவெடுக்க பாமகவின் நிர்வாகக் குழுக் கூட்டம்’ ஜனவரி 25 ஆம் தேதி இணைய வழியில் நடக்கும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்திருந்தார்.

“ பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பா.ம.க இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்திற்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமையேற்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழியும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். ஜனவரி 9-ஆம் தேதி நடைபெற்ற பா.ம.க நிர்வாகக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து விவாதித்து அரசியல் முடிவு எடுக்கப்படவிருக்கிறது”என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பாமகவின் இந்த நிர்வாகக் குழுக் கூட்டம் 25 ஆம் தேதியில் இருந்து ஜனவரி 31 ஆம் தேதிக்கு நிர்வாக காரணங்களுக்காக மாற்றப்பட்டிருக்கிறது என்று ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இதன் பின்னணி குறித்து விசாரித்தோம்.

“வன்னியர் உள் இட ஒதுக்கீடு சார்பாக அரசு சார்பாக முதல்வர் அலுவலகத்தில் இருந்தும், முதல்வர் சார்பாகவும் டாக்டர் ராமதாஸிடம் பேசியிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் இருக்கும் நிர்வாக சிக்கல்களை எடுத்துச் சொல்லி, ‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ என்று கூறியிருக்கிறார்கள்.

அவர்களிடம் டாக்டர் ராமதாஸ், ‘தனி இட ஒதுக்கீடு என்பதில் இருந்து உள் ஒதுக்கீடு என்ற நிலைக்கு நான் இறங்கி வந்தேன். எனக்கு அரசாணை பிறப்பித்துக் கொடுங்கள். கமிஷன் போட்டிருக்கிறோம் அப்படி இப்படி என்று சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். எனக்கு அரசாணை வேண்டும். சீட் எல்லாம் எனக்கு பிரச்சினையே இல்லை. வெறும் 15 சீட்டுகள் கொடுக்கிறீர்களா… பிரச்சினையே இல்லை. எனக்கு வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடுஅரசாணைதான் வேண்டும். நீங்கள் பேசியதற்காக நான் இன்னும் ஒரு வாரம் காத்திருக்கிறேன். நல்ல பதிலாக சொல்லுங்கள்” என்று சொல்லியிருக்கிறார். இதன் அடிப்படையிலேயே நிர்வாகக் குழுவை ஒருவாரம் தள்ளி வைத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

டெல்லியில் இருந்தும் பாஜக சார்பில் இந்த விவகாரம் குறித்து டாக்டரிடம் பேசியிருக்கிறார்கள். அவர்களிடமும் இதே பதிலையே சொல்லியிருக்கிறார் டாக்டர். இதன் அடிப்படையிலேயே ஜனவரி 25 ஆம் தேதி நடக்க இருந்த பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் 31 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் பாமக வட்டாரங்களில்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *