பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிப்ரவரி6 ஆம் தேதி இரவு 9 மணிக்கு தனது ட்விட்டர் பதிவில் ஒரு அதிர்ச்சி விவகாரத்தை வெளியிட்டார்.
“வேலூர் மாநகராட்சி 24ஆவது வட்டத்தில் தோல்வி பயம் காரணமாக பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் ஆர்.டி. பரசுராமனை திமுக மாவட்ட செயலாளர்கள் கடத்திச்சென்று போட்டியில் இருந்து விலக வேண்டும் இல்லையேல் தொழில் செய்ய முடியாது என்று மிரட்டுகிறார்கள்.
மக்கள் செல்வாக்கு உள்ளவர்கள் வெற்றி பெறுவது தான் ஜனநாயகம். செல்வாக்கு இல்லாதவர்கள் அதை வளர்த்துக் கொள்ள வேண்டும். மாறாக மிரட்ட கூடாது.
பாமக வேட்பாளரை மிரட்டிய திமுகவினர் மீது மாநில தேர்தல் ஆணையம், காவல்துறை, திமுக தலைமை ஆகியவை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலினை டேக் செய்து ட்விட்டர் பதிவை வெளியிட்டிருந்தார் டாக்டர் ராமதாஸ்.
இது வேலூர் மாநகரம் மட்டுமல்லாமல் தமிழக அரசியல் வட்டாரம் முழுமையும் பரபரப்பை கிளப்பியது.
இந்த விவகாரம் தொடர்பாக பாமக வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் இளவழகன் தலைமையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் என்.டி. சண்முகம், மாவட்ட தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் வேலூர் மாவட்ட எஸ்பி மற்றும் கலெக்டர் ஆகியோரிடம் இதுகுறித்து புகார் அளித்தனர்.
அந்தப் புகாரில், “வேலூர் மாநகராட்சி தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 25 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் ஆகியோர் போன் மூலமும் நேரிலும் அழைத்து வேட்பு மனுவை வாபஸ் வாங்க வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்.
24வது வார்டு பாமக வேட்பாளர் பரசுராமனை பிப்ரவரி 5ஆம் தேதி இரவு நந்தகுமாருக்கு சொந்தமான ஹோட்டலில் நேரில் அழைத்து
வேட்பு மனுவை வாபஸ் வாங்க வேண்டும். இல்லாவிட்டால் ஆம்புலன்ஸ் தொழிலை செய்ய விட மாட்டோம் எனவும் மிரட்டியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் அளித்தனர்.
இந்த நிலையில் இன்று பிப்ரவரி 7ஆம் தேதி மாலை வேலூர் திமுக மாவட்ட செயலாளரும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி. நந்தகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சிசிடிவி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அத்தோடு, “பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களே.. எங்களால் கடத்தப்பட்டதாக நீங்கள் கூறிய பரசுராமன் தனியாக வந்து வேலூர்
மாவட்ட செயலாளர் என்ற முறையில் என்னையும் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும் சந்தித்து சால்வை அணிவித்து தனக்கு திமுகவில் போட்டியிட வாய்ப்பு கேட்டதை பாருங்கள்.
அவரை மிரட்ட வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை.
இந்த உண்மையை நன்கு விசாரிக்காமல் எங்கள் மீது பொய்யான ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைப்பது ஏற்புடையதல்ல.
காரணம் பாமக வேட்பாளரை மிரட்டி வெற்றி பெற வேண்டிய நிலையில் திமுக எப்போதும் இல்லை” என்று பதிலளித்திருக்கிறார்.
பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா திரு @drramadoss அவர்களே எங்களால் கடத்தப்பட்டதாக நீங்கள் கூறிய திரு.பரசுராமன் அவர்கள் தனியாக வந்து வேமா.செயலாளர் என்ற முறையில் என்னையும், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும் சந்தித்து சால்வை அணிவித்து தனக்கு திமுகவில் போடியிட வாய்ப்பு கேட்டதை pic.twitter.com/ejqM1XWeZZ
— A.P.Nandhakumar MLA (@APNandakumarMLA) February 7, 2022
வேலூர் பேருந்து நிலையம் அருகே பப்பி அனுகுலா என்ற ஹோட்டல் நந்த குமாருக்கு சொந்தமானதாகும்.
பிப்ரவரி 5ஆம் தேதி இரவு 10. 14 மணிக்கு பாமக வேட்பாளர் பரசுராமன் அந்த ஓட்டலுக்குள் நுழைகிறார்.
உள்ளே சென்று நந்தகுமாரின் அறையில் காத்திருக்கிறார். அப்போது அங்கே வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயனும் மாவட்ட காங்கிரஸ் தலைவர் டீக்கா ராமனும் இருக்கிறார்கள். மூவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சிலநிமிடங்களில் டி ஷர்ட் போட்டுக் கொண்டு நந்தகுமார் அந்த அறைக்குள் நுழைகிறார். அவர் வந்தவுடன் பையில் வைத்திருந்த சால்வையை எடுத்து நந்தகுமார் மற்றும் கார்த்திகேயனுக்கு அணிவித்துவிட்டு பரசுராமன் அங்கிருந்து புறப்படுகிறார்.
சம்பவம் நடந்தது தன்னுடைய சொந்த ஹோட்டல் என்பதால் உடனடியாக சிசிடிவி காட்சிகளை எடுத்து டாக்டர் ராமதாசுக்கு பதிலை காட்சியாகவே கொடுத்துவிட்டார் திமுக மாவட்ட செயலாளர் நந்தகுமார்.
24 வது வார்டில் வேட்புமனு பரிசீலனையிபோது அதிமுக வேட்பாளர் வினோத் குமாரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வார்டில் திமுகவுக்கும் பாமகவுக்கும் நேரடி போட்டி நிலவியது.
அதனால் பாமக வேட்பாளரே திமுக மாவட்ட செயலாளர் நந்தகுமாரை தேடிச்சென்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆனால் இதை கடத்தல் என்று டாக்டர் ராமதாஸ் பிரச்சினையை கிளப்ப அதனால் தான் வீடியோவை வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்கிறார்கள் திமுக தரப்பினர்.
**வேந்தன்**