[சூர்யா படத்துக்கு பாமக எதிர்ப்பு!

politics

கடந்த வருடம் நவம்பர் 2ம் தேதி ஓடிடியில் வெளியான ஜெய்பீம் படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம். அதில் காவல் உதவி ஆய்வாளர் கதாபாத்திரம் உண்மைக்கு புறம்பாக வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவராகவும், அவரது வீட்டில் இருந்த காலண்டரில் வன்னியர்களின் அடையாளமான அக்கினி கலசத்தை அடையாளப்படுத்தியதற்கும் எதிராக பாமகவும், வன்னிய சமுதாய தலைவர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். அத்துடன், நடிகர் சூர்யா அடுத்து நடித்து திரையரங்குக்கு வரும்படங்களை திரையிட விடமாட்டோம் என கூறியதுடன் வட மாவட்டங்களில் சூர்யாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினார்கள்.

இந்த நிலையில் வருகின்ற 10ம் தேதி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் வெளியாக உள்ளது.

இதனையொட்டி பாமக மாணவரணி மாநில செயலாளர் இள.விஜயவர்மன் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “வன்னிய மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக, வன்மத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜெய்பீம் படத்தில் காட்சிகள் இடம்பெற்றதற்காக நடிகர் சூர்யா வன்னிய மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்காதவரை, கடலூர் மாவட்டத்தில் உள்ள எந்த திரையரங்கிலும்” எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தை திரையிடக்கூடாது” என்று பாட்டாளி மக்கள் கட்சிசார்பாகவும், வன்னியர் சங்கம் சார்பாகவும் கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.

இதேபோன்ற கடிதங்களை பாமக, வன்னியர்கள் அதிகமாக இருக்கும் 13 மாவட்டங்களின் நிர்வாகிகள் அடுத்தடுத்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவருக்கு அனுப்ப இருப்பதாக கூறப்படுகிறது.

**அம்பலவாணன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *