qஅனைவருக்கும் வீடு, 100 நாள் வேலை ஊதிய உயர்வு!

Published On:

| By admin

குடிசை இல்லாத தமிழகம் என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு அரசு செயல்படுவதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது 296 பக்கங்கள் கொண்ட கொள்கை விளக்கக் குறிப்பை அவர் தாக்கல் செய்தார்.

இதில், ‘ தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை செய்யும் பணியாளர்களுக்கு 2021-22ஆம் ஆண்டிற்கான அறிவிக்கப்பட்ட ஊதியம் நாளொன்றுக்கு ரூ.273 ஆக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது 2022-23ஆம் ஆண்டிற்கான அறிவிக்கப்பட்ட ஊதியம் 01.03.2022 முதல் ஆண்கள் மற்றும் பெண்கள் என்ற வேறுபாடு இன்றி தமிழ்நாட்டிற்கு நாளொன்றுக்கு ரூ.281 எனத் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைவருக்கும் வீடு என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த அரசு செயல்படுவதாகவும் இதில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் (ஊரகம்) கீழ் ஒன்றியம் மற்றும் மாநில அரசுக்கும் இடையேயான நிதிப் பகிர்வு 60:40 ஆகும். ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்ட அளவு தொகை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய். ஆனால் 2021- 22 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் செந்தர வீதப்பட்டியலின் படி, பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 269 சதுர அடி வீடு கட்டுவதற்கான தொகை ரூ.4.62 லட்சமாகும். இத்தொகை ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்ட அளவு தொகையை விட மிகமிக அதிகமாகும்.

தமிழ்நாட்டில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ஒரு வீடு கட்டுவதற்கான அளவு தொகை ரூ.2,76,570 ஆகும். இதில் ஒன்றிய அரசால் வழங்கப்படுவது ரூ.1,03,770ஆகும். இந்த தொகையில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் பங்குத் தொகை ரூ.72,000/- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் 90 நாட்களுக்கான ஊதிய தொகை ரூ.24,570/- மற்றும் தனிநபர் இல்ல கழிப்பறை கட்ட தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ஒன்றிய அரசின் பங்கு தொகை ரூ.7,200/- ஆகியவை அடங்கும்.

பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் தமிழக அரசின் பங்களிப்பு ரூ.1,72,800ஆகும். இதில் மாநில அரசின் பங்குத் தொகை ரூ.48,000, வீடுகளுக்கு மேற்கூரை அமைக்க கூடுதல் தொகை ரூ.1,20,000 மற்றும் தனிநபர் இல்ல கழிப்பறை கட்ட மாநில அரசின் பங்குத் தொகை ரூ.4,800 ஆகியவை அடங்கும்.

அதன்படி பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ஒன்றியம் மற்றும் மாநில அரசின் நிதி பகிர்வு 60:40 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் தமிழ்நாட்டில் நிதி பகிர்வு 38:62 என்ற விகிதத்தில் நடைமுறையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்று அமைச்சர் பெரியகருப்பன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குக்கிராமங்களைப் பள்ளிகள் மருத்துவமனைகள் மற்றும் சந்தைகள் உடன் இணைப்பதற்காகச் சாலை மேம்பாட்டு பணிகள் 1346 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

எழில்மிகு கிராமங்களை உருவாக்கச் சுற்றுச் சூழல் மேம்பாட்டு பணிகள் 431.39 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

ஊராட்சிகளின் அனைத்து சேவைகளும் இணையதளம் மூலம் வழங்கப்படும். கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் இணைந்து விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட வேளாண் நிலங்களில் 8.45 லட்சம் மரக்கன்றுகள் 11 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடப்படும்.

கிராமப்புற குழந்தைகளுக்காக 500 அங்கன்வாடி மையங்கள் 59.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

நிலமற்ற ஏழை பயனாளிகளுக்கு அரசு புறம்போக்கு நிலத்தில் 14.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஊரகப் பகுதிகளில் முதன் முறையாக அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும்.

25 ஆயிரம் புதிய சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்படும் குழுக்களுக்கு 30 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்கப்படும். 45 ஆயிரம் இளைஞர்களுக்கு 170 கோடி ரூபாய் செலவில் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

**-பிரியா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share