82ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று (அக்டோபர் 24) உரையாற்றினார்.
நமது தடுப்பூசித் திட்டத்தின் வெற்றி, பாரதத்தின் வல்லமையைப் பறைசாற்றுகிறது, அனைவரின் முயற்சி என்ற மந்திரத்தின் சக்தியைப் பிரதிபலிக்கிறது என 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது குறித்து பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் அவர், “ சில நாட்கள் முன்பாகத் தான் அக்டோபர் மாதம் 21ஆம் தேதியன்று நாம் காவலர் நினைவு தினத்தைக் கடைப்பிடித்தோம். . இன்று நான் நம்முடைய இந்தக் காவலர்களோடு கூடவே, அவர்களின் குடும்பத்தாரையும் நினைவில் கொள்ள விழைகிறேன். குடும்பத்தின் ஒத்துழைப்பும் தியாகமும் இல்லாமல், காவல்துறைப்பணி போன்ற சிரமமான சேவை புரிவது என்பது மிகவும் கடினமானது. காவல்துறை சேவையில் இணைந்திருக்கும் மேலும் ஒரு விஷயம் குறித்து நான் மனதின் குரல் நேயர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
ராணுவம் மற்றும் காவல்துறை போன்ற சேவைகள் ஆண்களுக்கானவை என்ற கருத்து முன்பெல்லாம் நிலவியிருந்தது. ஆனால், இன்று அப்படி அல்ல. காவல்துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணியகத்தின் புள்ளிவிவரப்படி, கடந்த சில ஆண்டுகளில் பெண் காவலர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது. 2014ஆம் ஆண்டு இவர்களின் எண்ணிக்கை 1.05 லட்சமாக இருந்த நிலையில் 2020ஆம் ஆண்டில் இது இரண்டு பங்கிற்கும் அதிகமாகி, கணிசமாக அதிகரித்திருக்கிறது. தற்போது, 2 லட்சத்து 15 ஆயிரமாக எட்டியிருக்கிறது. மத்திய ஆயுதமேந்திய காவல் படையினரிடத்திலும் கூட, கடந்த ஏழு ஆண்டுகளில் பெண்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி இருக்கிறது. மேலும் நான் வெறும் எண்ணிக்கை பற்றி மட்டுமே பேசவில்லை.
இன்று தேசத்தின் பெண்கள் மிகவும் கடினமான பணிகளையும் முழுச்சக்தியோடும், தன்னம்பிக்கையோடும் புரிந்து வருகிறார்கள். எடுத்துக்காட்டாக, மிகவும் கடினமானதாகக் கருதப்படும் பயிற்சிகளில் ஒன்றான, சிறப்புத்திறன் கொண்ட வனப்போர்ப்பயிற்சிக் கமாண்டோக்களுக்கான பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள். இவர்கள் நம்முடைய கோப்ரா படைப்பிரிவின் அங்கத்தினர்களாக ஆவார்கள்” என்று பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அக்டோபர் மாதம் முழுவதும் பண்டிகைகளால் அலங்கரிக்கப்படுகிறது. சில நாட்களில் தீபாவளியும் வரவிருக்கிறது. தீபாவளிக்குப் பிறகு பல்வேறு பண்டிகைகள் வரவுள்ளது. இதற்காக இப்போதிலிருந்தே பொருட்களை வாங்கும் திட்டமிடலில் ஈடுபட்டிருப்பீர்கள. அவ்வாறு பொருட்கள் வாங்குபவர்கள், உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுங்கள். நீங்கள் உள்ளூர் பொருட்களை வாங்கினால், உங்களுடைய பண்டிகைகளும் பிரகாசிக்கும், ஒரு ஏழை சகோதர சகோதரி, ஒரு கைவினை கலைஞர், ஒரு நெசவாளியின் வீட்டிலேயும் பிரகாசம் ஏற்படும்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.
**-பிரியா**
�,