பிளஸ் டூ தேர்வு: 2 நாட்களில் முடிவு!

Published On:

| By Balaji

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்படுமா? அல்லது நடத்தப்படுமா என்பது தொடர்பாக இரண்டு நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

கொரோனா நோய் தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைனிலேயே வகுப்புகள் நடத்தப்பட்டன. முதல் அலை சற்று ஓய்ந்த நிலையில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி பொதுத் தேர்வு எழுத இருக்கும் பிளஸ் டூ மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஏறத்தாழ எட்டு மாதங்களாக பள்ளிகளுக்கு செல்ல முடியாததால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து மே 3 – 21ஆம் தேதி வரை பிளஸ் டூ மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக அந்தத் தேதியும் ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே ஏப்ரல் மாதத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்குச் செய்முறைத் தேர்வு மட்டும் நடத்தப்பட்டன.

இந்த சூழலில், நேற்று பிரதமர் மோடி சிபிஎஸ்சி பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (ஜூன் 2) காலை ஆலோசனை நடத்தினார்.

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரதமர் மோடி சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு இந்த ஆண்டு முழுமையாக ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். அதுபோன்று தேர்வு ரத்து என்று சொல்லாவிட்டாலும், மாணவர்களின் உடல் நலமும் பாதுகாப்பும் முக்கியம் என்று முதல்வர் கூறியுள்ளார்.

பிளஸ் 2 தேர்வை நடத்துவது தொடர்பாகக் கடந்த மாதம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதித்தது குறித்து ஏற்கனவே முதல்வரிடம் சொல்லியிருந்தோம். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மற்ற அனைத்து மாநிலங்களும் பிளஸ் டூ தேர்வு நடத்தவேண்டும் என்றுதான் கூறின.

இந்நிலையில் இன்று முதல்வருடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்களிடம் அடுத்த இரண்டு நாட்களில் கருத்துக்கள் கேட்டுத் தேர்வு நடத்துவது தொடர்பாகத் தெரியப்படுத்துமாறு முதல்வர் அறிவுறுத்தினார்.

எனவே அடுத்த இரண்டு நாட்களில் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும். பிளஸ் டூ பொதுத்தேர்வு மதிப்பெண் முக்கியம் என்பதால் கவனத்துடன் முடிவு எடுக்க வேண்டிய சூழல் உள்ளது” என்று தெரிவித்தார்.

**-பிரியா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share