எட்டு லட்ச மாணவ, மாணவிகளுக்கான பிளஸ் 2 தேர்வு முடிவுகளை இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு முறையும் அறிவிக்கப்பட்டது. 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 50%, 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 20%, 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் 30% என்ற அடிப்படையில் கணக்கிட்டு இறுதி மதிப்பெண் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது.
அதன்படி, இன்று(ஜூலை 19) காலை 11 மணியளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகத்தில் வைத்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை வெளியிட்டார். அப்போது, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், தேர்வுகள் துறை இயக்குநர் உஷா ராணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையடுத்து பேசிய அமைச்சர்,” பிளஸ் 2 மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, dge2.tn.nic.in,dge.tn.gov.in என்ற தளங்களில் மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம். அதுபோன்று மாணவர்கள் பள்ளியில் வழங்கியுள்ள கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். வரும் 22ஆம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிளஸ் 2 தேர்வில் 3,80,500 மாணவர்கள், 4,35,973 மாணவிகள் என மொத்தம் 8,16,473 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப்பாடப்பிரிவில் 7,64,593 பேரும், தொழிற்பாடப்பிரிவில் 51,880 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளிக்கு வராத 1,656 மாணவர்கள் தேர்ச்சி இல்லை. பிளஸ் 2 தேர்வில் 600க்கு 600 என எந்த மாணவரும் மதிப்பெண் எடுக்கவில்லை.
39,679 மாணவர்கள் 551-600 என்றளவிலும், 1,67,133 மாணவர்கள் 501-550 என்றளவிலும், 2,22,522 பேர் 451-450 என்றளவிலும், 2,08,015 பேர் 401-450 என்றளவிலும்,1,19,589 பேர் 351-400 என்றளவிலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
பிளஸ் 2 மதிப்பெண்கள், இதுவரை முழுமையான மதிப்பெண்களாக வழங்கப்பட்டன. தற்போதைய கணக்கீட்டின்படி இறுதி மதிப்பெண்கள் தசம எண்களுடன்(உதாரணமாக70.11) சேர்ந்து வரும். இந்த மாதிரி மதிப்பெண் வழங்குவது இதுவே முதல்முறை.
மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்களும், தனித் தேர்வர்களும், தேர்வு எழுதாதவர்களுக்கும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு நடத்தப்படும். அந்த தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களே இறுதி மதிப்பெண்ணாக கருதப்படும். பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி என்று மட்டுமே இருக்கும்” என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் 14,674 மாணவர்களுக்கான பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டது.
**-வினிதா**
�,