நல்லிணக்கக் கவசவேல்!

Published On:

| By Balaji

ஸ்ரீராம் சர்மா

கந்தசஷ்டிக் கவசத்தின் ஸ்தூல வடிவமான – உலகின் முதல் நல்லிணக்கக் கவசவேல் 27.10.2021 அன்று வட சென்னையில் பன்னிரண்டு அடி ஓங்க இனிதே ஊன்றப்பட்டது!

ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்பு அருளோங்கும் பழனி மலை முருகன் மீது கௌமார குருமகான் தேவராய சுவாமிகளால் மந்திர சொற்கள் அடங்கப் பாடப்பட்ட திராவிட இலக்கியமே கந்த சஷ்டிக் கவசம்!

கந்த சஷ்டிக் கவசத்தை திராவிட இலக்கியம் என்றழைப்பதைக் குறை கண்டுவிட முடியாது! பாழரசியல் பாற்பட்டு மொழி வாரியாக ஆந்திரம், கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு எனப் பிரிக்கப்படும் முன், இந்த மண் – ஒன்றிணைந்த திராவிட நிலமாகத்தானே இருந்தது!?

இன்றளவும் தமிழகத்தின் பழனியம்பதி காண மலையாளிகள் அதிகம் வருவதும், கேரள சபரிமலை பயணம் செல்ல தமிழர்கள் இருமுடி சுமப்பதும், ஆதிமண்ணைத் தொட்டுச் சுகம் காணும் அலாதியான கொண்டாட்டம்தானே!

விஷயத்துக்குள் போவோம் !

அன்றும் இன்றும் எளிய தமிழர்களால் அதிகமதிகம் மனனம் செய்யப்பட்ட ஒரே பக்தி இலக்கியமாகிறது கந்த சஷ்டிக் கவசம்! அடியேனை ஈன்றவளே அதற்கு சாட்சி!

ஆம், காலையும் மாலையும் குளித்து குங்குமமிட்டு – சிறுவன் என்னை மடியோரமாய் அமர்த்திக்கொண்டு சர்வ சரளமாய் கவச பாராயணம் செய்த எனது தாயாரின் ஸ்வாசக் காற்றை அண்ணாந்து அனுபவித்தவன் நான்!

**பெண்களை தொடரும் பிரம்ம ராட்சதரும்**

**அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட**

என்னும் வரியை என் தாயார் பாடும் அந்தப் பொழுதில் மட்டும் அது குறித்த பயமும், கோபமும் என்னுள் எழுந்திருக்கிறது.

பன்னிரண்டு வயதில் கொடுங்கூற்றுக்கு அவளை இழந்தேன். அந்த நாள் முதல் கவச ஸ்வரங்கள்தான் என் தாய்!

சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த உயர்ந்த பக்தி இலக்கியத்தை சிலர் தூற்றியபோது மனம் கசந்தேன். விவரமற்று பேசும் அந்தத் தம்பிகளைத் தூற்ற மனம் வரவில்லை எனினும், இதுபோன்ற கொச்சைகளால் தமிழின் இலக்கிய செல்வங்கள் அழிந்துவிடக் கூடாது, இனியும் அது தொடரக் கூடாது என எண்ணினேன்.

கந்த சஷ்டிக் கவசம் எனுமந்த உயர்ந்த தமிழ் இலக்கியத்துக்கொரு ஸ்தூல வடிவம் ஒன்றைக் கொண்டு நிறுத்திவிட்டால் மக்களிடம் விழிப்புணர்வு வந்து விடும் என நம்பினேன். பலரிடமும் பகிர்ந்தேன்.

முடிவில், அந்தக் கவசவேல் தனக்கெனத் தேர்ந்தெடுத்துக் கொண்ட மண் வட சென்னை!

திருவருட்பிரகாச வள்ளலார் நிறைந்து வாழ்ந்த புனித பூமியாம் வட சென்னையில் அந்தப் பெரும்பணியை முன் நின்று செய்தவர் ஜீவன் சுப்பிரமணி.

வைகோவின் வழித்தோன்றல்தான் என்றாலும், எனக்கு பெருமாளும் வேண்டும் எனும் துரை வைகோ போல ஆன்மிக முகம் காட்டி நின்றார் ஜீவன் சுப்பிரமணி. அவர் மனைவி கண்ணகி உள்ளிட்ட மொத்தக் குடும்பமும் அவருக்குத் துணை நின்றது.

இதுகாறும், வட சென்னை குறித்த தவறான தோற்றத்தையே திரைப்படங்கள் நமக்குக் காட்டிக் கொண்டிருந்தன. வட சென்னைவாசிகள் அடிதடி செய்பவர்கள், அராஜகமானவர்கள் என்றே சொல்லப்பட்டு வந்தது. அது, முற்றிலும் தவறு.

உண்மையில், வட சென்னை மக்கள் பாசம்மிக்கவர்கள். மூர்க்கமானவர்கள் என்றாலும் உண்மைக்கு உயிர் கொடுப்பவர்கள். தன்மானம் கொண்டவர்கள். அன்பை கூட அதிர்ந்த தொனியில் பரிமாறப் பழக்கப்பட்டவர்கள். எளிய பக்தியில் மெய் மறப்பவர்கள்.

அதனால்தான், உலகின் முதல் கவசவேல் எளியோரின் மண் தேடி தன்னை நிலைநிறுத்திக் கொண்டது போலும்!

அவதார காவியமான ராமாயணமும் எளிய குல வேட்டுவனை அரவணைத்துத்தான் ‘குகனொடு ஐவர் ஆனோம்’ என்றது!

இயேசுபிரானின் முதல் பிரசங்கமும்கூட எளிய மனிதர்களான மீனவர்கள் மத்தியில்தானே நிகழ்த்தப்பட்டது!

புத்தர், இராமானுஜர் என சகல குருமார்களும் எளிய மனிதர்களின் வழியே தங்கள் கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்கத் துணிந்தார்கள்!

குருமார்களின் கோட்பாடுகள் அனைத்தும் சமூக நல்லிணக்கத்தை மறை பொருளாக நாடி நிற்பதாகவே கொள்ள முடிகிறது!

அப்படியாகத்தான் அன்றந்தப் புனித சஷ்டி நாளில், திருக்கயிலாயப் பரம்பரை மெய்கண்ட சன்னிதானம் பேரூராதீன 25ஆவது குருமகா சன்னிதானம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாரும்…

சிரவையாதீனம் கௌமார மடாலயம் குருமகா சன்னிதானம் திருப்பெருந்திரு குமரகுரு அடிகளாரும்.,,

வள்ளலார் வாழ்ந்த வட சென்னையில் – பழனி முருகனைப் போல மேற்கு திசை நோக்கி நின்ற கவசவேலின் பிரதிஷ்டையை ஒன்றிணைந்து நடாத்தி வியாசர்பாடியை வியக்க வைத்தார்கள்!

‘அற்புதம் எனிலது ஆன்றோர் மாட்டே’ எனும்படியாக எளிமையான முச்சந்திக் கோயிலில் யாக சாலை கண்டார்கள்!

எளிமைத் தன்மைதானே உயர்ந்த ஆன்மிகத்துக்கான அழகு!

யாக சாலையிலிருந்து புனித நன்னீராட்டுக் குடத்தைத் தலையில் சுமந்து தள்ளாடி வந்த ஜீவன் சுப்பிரமணியை தமிழகத்தின் இரு பெரும் ஆதீனங்களும் ஆசீர்வதித்து – மேடையேற்றி – கவசவேலுக்கு நன்னீராட்டிய காட்சி எளிய ஆன்மிகத்தின் அதி உச்சம்!

“ஆடம்பரமும், மாட மாளிகைகளும் எமக்குத் தேவையில்லை. எங்கு உண்மையான பக்தி உண்டோ அங்கு நாமிருப்போம்…” எனும்படியாக எளியோரை நாடி வந்து ஆசீர்வதித்த பெருந்தகவு படைத்த இரு குரு மகா சன்னிதானங்களையும் எளிய எழுத்தாளன் பணிந்து வணங்கிப் போற்றுகிறேன்!

எலி வலைக்குள் திருவிழா என்பதுபோல அந்தக் குறுகிய இடத்தில் அடித்துப் பிடித்து 12 அடி உயர கவசவேலை ஸ்தாபித்து அசத்தியே விட்டார்கள் வட சென்னைவாசிகள்.

கவசவேல் புனித விழாவுக்குத் தலைமை ஏற்கவிருந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அன்று திருவண்ணாமலைக்குச் சென்று விட்டார். மேலும் 54 இடங்களில் நல்லிணக்க கவசவேல் ஊன்றப்பட வேண்டும் என்னும் கௌமாரக் கோட்டத்தின் வேட்கைக்கு அதன் தகப்பன் ஸ்தலத்தில் உத்தரவு வாங்கி வர சென்றிருப்பார் என நம்புவோம்.

இறை இசை தென்றல் கலைமாமணி வீரமணி ராஜு அவர்கள் தன் இசை வாரிசான அபிஷேக் ராஜுவோடு வந்திருந்து கான மழை பொழிந்தார்.

வழக்கறிஞர், செந்தமிழேறு பால ஸ்ரீனிவாசன் – முனைவர் கற்பகம் இருவரும் கவசவேலை வர்ணனை செய்து நெகிழ்ந்தார்கள்.

இரண்டு நாள் எளிய யாக சாலையினை பேரூர் சாந்தலிங்கர் அருள்நெறி மன்றம் சார்பாக முனைவர் சிவத்திரு சதீஷ்குமார் நிகழ்த்த, சிவத்திரு ம.ஜெயப்பிரகாச நாராயணன் ஓதூவாமூர்த்திகள் திருமுறைப் பண்ணிசைத்து எண் திசையும் சொக்க வைத்தார்.

ஆலய ஸ்தபதி திருமிகு வீர ராஜு அவர்கள் அருள்மிகு யாளி பிரபையை அமைத்துக் கொடுக்க, ஓவியர் திருமிகு மணி அவர்கள் வர்ணம் தீட்டிக் கொடுக்க, உடனிருந்து தொண்டாற்றினார் மோகன். விக்டர் எபினேசர் அழைப்பிதழ் வடிவமைப்பு முதல் சகலத்திலும் தன் பங்கை செலுத்த, வழக்கறிஞர் குமார் ஓடியாடி வரவேற்றார்.

கவசவேலைக் காண வந்த பக்தர்கள் அனைவருக்கும் அள்ளி அள்ளி அன்னதானம் செய்தார் 80 பேர் அடங்கிய தமிழகத்தின் பெருங்கூட்டுக் குடும்பத்துக்கு சொந்தக்காரரான கிருஷ்ணன்.

கெழுதகைய நண்பர்களான தெலுகு சங்கத்தின் சந்திரசேகர் தோடேத்தி, சுமதி ஹேமந்த் – மலையாள சங்கத்தின் சத்யன் நாயர், ஸ்ரீதர் குருப்பந்தோதி – பெங்களூர் கன்னட சங்கத்தின் ஜெய்சங்கர் – டாக்டர் ரேஹான் ஆகியோர் நல்லிணக்க கவசவேல் நன்னீராட்டுக்கு விரைந்தோடி வந்து அர்ப்பணித்த விதம் நல்லிணக்க கவசவேலின் நோக்கத்தை உயர்த்திப் பிடித்தது!

ஒன்றிணைந்து வாழத்தானே பூமி!

ஒன்றாக்கி வைத்தால்தான் அது, சாமி!

**கட்டுரையாளர் குறிப்பு**

**வே.ஸ்ரீராம் சர்மா** – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share