தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 44,000 கோயில்களில் வெளிப்படைத் தன்மையுடன் தணிக்கை செய்ய வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில், “இந்து சமய மற்றும் அறநிலைய அறக்கட்டளை துறையின் 2020-21ஆண்டுக்கான கொள்கை குறிப்பில், மாநிலத்தில் உள்ள 34,102 கோயில்களின் ஆண்டு வருமானம் ரூ.10,000 க்கும் குறைவாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும்.
கோயில்களைச் சுற்றியுள்ள தற்போதைய சூழ்நிலைகள் எதிர்பார்த்த தரத்தில் இல்லை. கோயில்களில் ஆன்மீக செயல்முறைகளும் சடங்குகளும் செய்யப்பட முறையாகப் பராமரிக்கப்படுவது அவசியம்.
எனவே கோயில்களின் கட்டமைப்புகள், நிலங்கள், அசையா சொத்துகள், கோயில் சொத்துகளின் உடைமை, ஆக்கிரமிப்பு, வாடகை மற்றும் நிலுவைத் தொகை ஆகியவற்றைக் கண்டறியக் கிட்டத்தட்ட இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 44,000 கோயில்களில் வெளிப்படைத் தன்மையுடன் தணிக்கை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமின்றி கோயில்களில் வழக்கத்தில் இருக்கும் சடங்குகளும், ஆன்மீக செய்முறைகளும் பழக்கத்தில் உள்ளனவா என்றும் மக்களிடம் இருந்து பெறப்படும் நிதி, கட்டணம் மற்றும் இந்த நிதிகளின் நிலை போன்ற பிற சொத்துகளின் நிலையும் கண்டறியப்பட வேண்டும். இதற்காக வல்லுநர்கள் , ஆன்மிக வாதிகளை கொண்ட ஒரு சிறப்பு குழுவை அமைத்து வெளிப்படைத் தன்மையுடன் தணிக்கை செய்ய வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்திய நாராயணா, வேல்முருகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
**-பிரியா**
�,