அரசுக்கு மீண்டும் கெடு விதித்த அண்ணாமலை

politics

பெட்ரோல் டீசல் விலையை 30 நாட்களுக்குள் குறைக்கவில்லை எனில் திருச்சியில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதைப் போல் தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தினார். விலையைக் குறைக்க 72 மணி நேரம் கெடு விதித்த அவர், அரசைக் கண்டித்து மே 31ஆம் தேதி கோட்டையை நோக்கி முற்றுகை பேரணி நடத்தப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி இன்று (மே 31) சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே அண்ணாமலை தலைமையில் ஏராளமான பாஜகவினர் குவிந்தனர். ஹெச். ராஜா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, கடந்த இரண்டு மூன்று நாட்களாக ஊர் ஊராகச் சென்று திமுக அமைச்சர்கள் பட்டத்து இளவரசரை அமைச்சராக்க வேண்டும் என்று தீர்மானம் போடுகின்றனர். இவர்கள் இப்படி தீர்மானம் போட்டுக் கொண்டிருக்கையில் பிரதமர் மோடி கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருந்தார்” என்று குறிப்பிட்டார்.

“பாஜகவின் போராட்டத்திற்குப் பயந்து தான் முதல்வர் டெல்டா மாவட்டங்களுக்குச் சென்று விட்டார். இந்த அரசின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் 750 நாட்கள் மட்டுமே இந்த ஆட்சிக்கு இருக்கிறது. கஞ்சாவின் தலைநகரமாகத் தமிழகம் மாறிக்கொண்டிருக்கிறது. கஞ்சா ஆபரேஷன் 1,2 என போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படியே சென்றால் லோக்சபா தேர்தலுக்குள் கஞ்சா ஆபரேஷன் 31ல் போய் நின்று விடுவார்கள்” என்று விமர்சித்தார்.

“பொது மக்கள் சாலைகளில் நடந்து செல்ல பயப்படுகிறார்கள். சென்னையில் யாருக்கு, எப்போது வெட்டு விழும் என்பதே தெரியாத நிலை இருக்கிறது. மானாட மயிலாட நிகழ்ச்சி போல் வெட்டும் சம்பவங்கள் எல்லாம் லைவாக வருகிறது” என்றார்.

இலங்கைத் தமிழர்களுக்காக பாஜக போராடுகிறது என்று தெரிவித்த அவர், முதல்வர் ஸ்டாலினைப் பொருத்தவரை கச்சத்தீவை, துபாய்க்குப் போய் வருவது போல் நினைத்துக் கொண்டிருக்கிறார். கச்சத்தீவை இவர்களால் கனவில் கூட மீட்க முடியாது. ஏனென்றால் அதை மீட்பதற்கான அருகதை திமுகவிற்கு கிடையாது. கச்சத்தீவை எப்படி மீட்டு கொண்டுவர வேண்டும் என்று பாஜகவுக்குத் தெரியும். கொண்டுவந்து காட்டுகிறோம்” என்று குறிப்பிட்டார்.

பிரதமர் முன்பு முதல்வர் சொன்ன அனைத்து தகவல்களும் தவறானது என்று கூறிய அண்ணாமலை, “நம்முடைய தமிழக நிதியமைச்சர் எங்கு சென்று பரீட்சை எழுதினாலும் அவர் ஒரு தோல்வியடையும் மாணவர் ஆவார். அமெரிக்காவுக்குச் சென்று 2 பேங்கில் பரீட்சை எழுதிவிட்டு இரண்டையும் கவுத்திவிட்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் வந்து, அவரது தாத்தாவின் பெயரை ஒவ்வொரு நாளும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

எல்கேஜி குழந்தைகள் எல்லாம் ரைம்ஸ் பாடுவதுபோல் திமுக அமைச்சர்கள் எல்லாம் எனக்கும் ஆங்கிலம் தெரியும் என்று ரைம்ஸ் பாடினார்கள். முதல்வர் பேசிய ஆங்கிலத்தைப் பார்த்துப் பயந்து தான் பிரதமர் மோடி புறப்பட்டு விட்டார்” என்று திமுக அரசையும் அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

மேலும் அவர், இன்னும் இருபது நாட்கள் கொடுக்கிறோம். அதற்குள் தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை முறையே 5 ரூபாய் மற்றும் 4 ரூபாய் குறைக்க வில்லை எனில் 20 நாட்களுக்குப் பிறகு பாஜக தமிழகம் முழுவதும் உண்ணாவிரத அறப்போராட்டத்தை கையில் எடுக்கும்.

இந்த போராட்டத்துக்கும் அரசு செவிசாய்க்க வில்லை எனில் 30 நாட்கள் கழித்து பாஜக தொண்டர்கள் தமிழகத்திலிருந்து திருச்சியை நோக்கி வருவார்கள். சுமார் 10 லட்சம் பாஜகவினர் திருச்சியில் குவிவார்கள். இன்னும் கொஞ்ச நாட்களுக்கு திமுக உயிரோடு இருக்க வேண்டும் என்று நினைத்தால் பெட்ரோல் டீசல் விலையை குறையுங்கள்” என்று கூறினார்.

பாஜகவினர் பேரணி தொடங்கிய சிறிது தூரத்திலேயே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதோடு போராட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து தனது காருக்கு செல்லும் வழியில் கடுமையான நெரிசல் ஏற்பட்டதால், அங்கிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறி தனது கார் இருக்கும் பகுதிக்கு சென்று அங்கிருந்து அண்ணாமலை கமலாலயம் சென்றார்.

ஆனால் அவர் ஆட்டோவில் ஏறி கோட்டையை முற்றுகையிடச் செல்கிறார் என்ற தகவல் பரவியதால் போலீசார் நேப்பியார் பாலம் பகுதியில் தீவிர வாகன கண்காணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் அண்ணாமலை கோட்டையை நோக்கிச் செல்லவில்லை என்ற தகவல் தெரியவந்ததும் குழப்பம் முடிவுக்கு வந்தது.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.