�சிறப்புக் கட்டுரைத் தொடர்: அம்பேத்கர் வழியில் பெரியாரும் தலித் அரசியலும் – 2

Published On:

| By Balaji

கார்த்திக் ராம் மனோகரன் – தமிழில்: தீபலட்சுமி

**பெரியாரும் அம்பேத்கரும்**

காங்கிரஸ் கட்சியைப் பிரிந்து சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய காலந்தொட்டே பெரியாருக்கு அம்பேத்கர் மீதான அபிமானம் இருந்து வந்துள்ளது. 1927 முதல் அம்பேத்கரின் செயல்பாடுகளுக்குக் கொள்கை ரீதியான ஆதரவைப் பெரியாரின் இயக்கம் அளித்து வந்துள்ளதாகவும் பெரியார் முக்கிய பங்கு வகித்த வைக்கம் போராட்டங்கள் அம்பேத்கரை வெகுவாக ஈர்த்ததாகவும் வ.கீதா குறிப்பிடுகிறார். (ஃபார்வர்ட் ப்ரஸ், 21 ஜூன், 2017).

திருமாவேலனும் இக்கருத்தை ஆமோதிப்பதோடு தலித்துகளுக்கான தனித் தொகுதிகள் கோரியதில்தான் அம்பேத்கருக்கும் அவரது அரசியலுக்கும் பெரியாரின் ஆதரவு வலுப்பெறத் தொடங்கியது என்று மேலும் குறிப்பிடுகிறார். பூனா ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நடைபெற்ற சர்ச்சைகளில் பெரியார் வெளிப்படையாக அம்பேத்கருக்கு ஆதரவு தெரிவித்ததோடு அம்பேத்கர் தனது கோரிக்கைகளில் இருந்து பின்வாங்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறார். (ப.திருமாவேலன் – ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? – 190)

அம்பேத்கரை விமர்சித்தவர்களை எதிர்த்து 1932இல், “தலித்துகள் சமூகத்தில் சம உரிமைகள் அடைய வேண்டும் என்றால் அவர்கள் இந்துக்களிடமிருந்து விலகி தனியாகப் போராடுவது ஒன்றே வழி” என்று அறிவிக்கிறார். (ப.திருமாவேலன் – ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா?)

1935இல் சேலத்தில் பட்டியலினங்களில் ஒன்றான பள்ளர் சாதியினர் (தற்போது பள்ளர்கள் எஸ்சி பட்டியலில் இருக்கின்றனர். ஆனால், முக்கியமான பள்ளர் தலைவர்கள் தலித் அடையாளத்தை நிராகரித்து எஸ்சி பட்டியலிலிருந்து தங்களை வெளியேற்றுமாறு கோரிக்கை வைத்திருக்கின்றனர்) நடத்திய கூட்டத்தில், “**தீண்டாமைக் கொடுமையினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் காந்தியின் உயிரைவிட எவ்விதத்திலும் குறைந்தது அல்ல” என்று அம்பேத்கரிடம் தெரிவித்ததாகப் பெரியார் குறிப்பிடுகிறார்**. அந்த நேரம் காந்தி தனித்தொகுதிகள் உருவாக்கப்படுவதை எதிர்த்துச் சாகும்வரை உண்ணாநோன்பு மேற்கொண்டிருந்தார். காந்தியின் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ‘மிக மூர்க்கமான அச்சுறுத்தல் நடவடிக்கை’ என்று குறிப்பிடுகிறார் பெரியார் (சுபகுணராஜன் – நமக்கு ஏன் இந்த இழிநிலை? – 224). மேலும் பூனா ஒப்பந்தம் எவ்வாறு இருப்பினும் பள்ளர்கள் தங்களுக்கென்று தனித் தொகுதிகளுக்காகப் போராட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.

**1935களிலேயே பெரியார் தமிழ்நாட்டு தலித் மக்கள் அம்பேத்கரைத் தங்கள் தேசியத் தலைவராக ஏற்கும்படி வலியுறுத்துகிறார்.** 1936இல் அவர்களை அம்பேத்கர் வழியில் சென்று இந்துமதத்தைக் கைவிடும்படியும் ஆலோசனை வழங்குகிறார் (சுபகுணராஜன் – நமக்கு ஏன் இந்த இழிநிலை? – 240).

1932 முதல் 1944 வரை பெரியாரின் கட்சி இதழான ‘குடி அரசு’ அம்பேத்கரின் அரசியல் நிலைப்பாடுகளை ஆதரித்து 37 கட்டுரைகளை வெளியிட்டது. (ப.திருமாவேலன் – ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? – 192)

அனைத்து முக்கிய அரசியல் இயக்கங்களும் டாக்டர் அம்பேத்கரை ஓரங்கட்டும் முயற்சியில் இருந்த காலகட்டத்தில் இந்தியாவின் தலித் மக்களின் ஒரே குரலாகவும் அவர்களின் உண்மையான பிரதிநிதியாகவும் அம்பேத்கரை அடையாளம் கண்ட முதன்மையான தலைவர்களில் ஒருவர் பெரியார். (Venkatachalapathy – Tamil Characters – 9)

அம்பேத்கரின் எழுத்துகளில் மிகப் பிரபலமான ‘சாதியை அழித்தொழித்தல்’ நூல் தமிழாக்கம் செய்யப்பட்டு, பெரியாரின் உத்தரவின் பேரில் குடி அரசு இதழில் தொடராக வெளியிடப்பட்டது.

**திராவிடஸ்தான்**

1940 ஜனவரி மாதத்தில் பெரியார் அம்பேத்கரையும் ஜின்னாவையும் மும்பையில் சந்தித்து திராவிட நாட்டுக்கு அவர்களது ஆதரவைக் கோருகிறார் பெரியார் (Venkatachalapathy – Tamil Characters – 9). அம்பேத்கரை நேரில் சந்தித்தது இதுவே முதன்முறையாக இருக்கக் கூடும். (பெரியாருக்கும் அம்பேத்கருக்குமான இடையிலான சந்திப்புகள் நிகழ்ந்தபோதெல்லாம் அவர்கள் இருவருக்கும் இடையில் மரியாதையும் அன்பும் முகிழ்ந்த நட்பே இருந்ததாகப் பார்த்த சாட்சியங்கள் உள்ளன.)

ஜின்னாவைச் சந்திக்கும் முன்பு பெரியார் அம்பேத்கரிடம் ‘திராவிடர்களுக்கென்று தனி நாடு கோர வேண்டிய தேவை’ குறித்து உரையாடுகிறார். (Visswanathan – The Political Career of E.V. Ramasamy Naicker – 273) அம்பேத்கர் தலைமையேற்ற கூட்டத்தில் ‘பார்ப்பனியத்தை வளர்த்துவிட்டு ஏனைய சமூகங்களைச் சீரழித்து விட்டது காங்கிரஸ்’ என்று பெரியார் பேசுகிறார். அம்பேத்கர் இதை ஆமோதித்து, ‘பார்ப்பனியம் தான் இந்திய நாட்டின் உண்மையான சாபக்கேடு’ என்று குறிப்பிடுகிறார். (த டைம்ஸ் ஆஃப் இண்டியா, 8 ஜனவரி, 1940). தங்கள் சந்திப்பை நினைவுகூர்ந்து எழுதும் பெரியார், அம்பேத்கர் காங்கிரஸ் மீதான தனது விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு மீதான தனது எதிர்ப்புக்கும் ஆதரவு அளித்ததாகக் குறிப்பிடுகிறார். (ப.திருமாவேலன் – ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? – 195)

**பின்னாளில் 1952இல், இந்துக்கள் ‘தோழர் ஜின்னா’விடமிருந்து தப்பிவிட்டதாகவும், ஆனால் ‘தோழர் அம்பேத்கரிடமிருந்து’ “தப்பிக்க முடியாமல் அவரிடமிருந்து அடிமேல் அடி வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார்.** (ப.திருமாவேலன் – ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? – 193)

பெரியாரின் திராவிட நாடு கோரிக்கையானது திராவிடர்களுக்குத் தனிநாடு என்பதையும் தாண்டி, தலித்துகள், சூத்திரர்கள், பெண்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகப்பிரிவினர் அர்த்தமுள்ள குடியுரிமையை (Substantive Citizenship) அடைய செய்யும் முயற்சியே ஆகும். (Pandian – Denationalising the Past – 22 82) திராவிடக் கனவு என்பது, பெரியாரைப் பொறுத்தவரையில் தலித் விடுதலையும் உரிமைகளும் நிறைவேற்றப்படாமல் முழுமையடையக் கூடியதன்று. **1944இல் அம்பேத்கர் பெரியாரைச் சென்னையில் சந்தித்து “திராவிடஸ்தான்” என்ற பெயரில் தென்னிந்தியாவுக்கென தனியொரு திராவிட அரசியல் பிரிவை நிர்மாணிக்கும் தேவை குறித்துக் கலந்துரையாடுகிறார்.** (Jaffrelot – Dr Ambedkar and Untouchability – 82) அம்பேத்கரின் வரவுக்கு முன்பு பார்ப்பனரல்லாதவர்களின் அரசியலை முன்னெடுத்த நீதிக்கட்சி கலைக்கப்பட்டு மேலும் தீவிரமான கொள்கைகளுடன் பெரியாரின் தலைமையில் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டது.

**நீதிக்கட்சியின் வீழ்ச்சிக்குக் காரணம்**

திராவிடர் கழகம் என்பது அதன் மற்ற முக்கிய கொள்கைகள் தவிர்த்து, நீதிக்கட்சியின் பார்ப்பனரல்லாத மேட்டுக்குடி உறுப்பினர்களுக்கு எதிரான கலக நடவடிக்கையும் ஆகும். ‘அம்பேத்கரும்கூட நீதிக்கட்சியின் மீதான பெரியாரின் விமர்சனத்துடன் உடன்பட்டதாகக்’ கூறுகிறார் க்ரிஸ்டோஃப் ஜாஃபர்லா. (Jaffrelot – Dr Ambedkar and Untouchability)

நீதிக்கட்சியின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்த மதிய விருந்தொன்றில் கலந்துகொண்ட அம்பேத்கர், “நீதிக்கட்சி துவங்கப்பட்டது ஒரு வரலாற்று நிகழ்வாகும். ஆனால், அதன் வீழ்ச்சி மிகுந்த மனவேதனையுடன் நினைவுகூரப்படும்” என்று குறிப்பிடுகிறார். (Advice to Justice Party) இருப்பினும்** தங்களை இரண்டாந்தரப் பார்ப்பனர்களாக அடையாளம் காட்டிக்கொண்ட நீதிக்கட்சியினரைக் கண்டனம் செய்ததோடு, பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் இடையேயான முக்கிய வேறுபாடுகளைத் தெளிவாக விளக்கத் தவறியது நீதிக்கட்சியின் வீழ்ச்சிக்கு ஒரு முக்கியமான காரணம் என்றும் ’நம்மிடையே ஒற்றுமை மிக இன்றியமையாதது’ என்றும் பார்ப்பனரல்லாதாரிடம் வேண்டுகோள் விடுக்கிறார்**. (Advice to Justice Party) தெரிந்தோ, தெரியாமலோ நீதிக்கட்சியின் மீது திராவிடர் கழகம் வைத்த அதே விமர்சனங்களையே அம்பேத்கரது கருத்துகளும் எதிரொலித்தன.

**புத்தம் பற்றி பெரியார், அம்பேத்கர்**

1954இல் பர்மாவில் நடைபெற்ற உலக புத்தமத மாநாட்டில் பெரியார் கலந்துகொள்ள வேண்டும் என்று அம்பேத்கர் விருப்பம் தெரிவிக்கிறார். (Nachiappan – Burmavil Periyar – 10) பெரியாரும் உடனே இசைந்து ரங்கூனுக்குப் புறப்பட்டுச் செல்கிறார். மாநாட்டில் கலந்துகொண்ட ஒருவர் பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் புத்தமதத்தைக் குறித்து ஒத்த கருத்துகள் இருந்ததாகவும், பெரியாரின் உரை மாநாட்டில் கலந்துகொண்டவர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதாகவும் பதிவு செய்கிறார் (Nachiappan – Burmavil Periyar – 26). மேலும், புத்தமதம் என்பது பகுத்தறிவுதான் என்று அம்பேத்கர் நம்பினார்; (Ambedkar – What the Buddha Taught – 21) பெரியாரோ புத்தமதத்தைப் பகுத்தறிவின் தத்துவம் என்று தெரிவித்தார் (Aloysius – Periyar on Buddhism – 12). இவ்விரு சிந்தனையாளர்களும் புத்தமதத்தில் இருக்கும் சமத்துவக் கோட்பாடுகளைக் கண்டறிந்து அதை அறிவியலுக்கும் நவீனமயத்துக்கும் மிக நெருக்கமான, உலகளாவிய சிந்தனையாகப் பரிந்துரைத்தார்கள்.

இரண்டாண்டுகளுக்குப் பிறகு, **பெரியார் புத்தமதத்தை, “ஆரியவாதத்துக்கு எதிரான அணுகுண்டு” என்று குறிப்பிட்டு, அம்பேத்கரின் கடவுள் மறுப்பையும் இந்து மதத்தினின்று வெளியேறியதையும் நிபந்தனையின்றி ஆதரித்தார்.** (Aloysius – Periyar on Buddhism – 22)

பர்மாவில் அம்பேத்கருடன் நிகழ்ந்த சந்திப்பை 1959இல் நினைவுகூர்ந்த பெரியார், அம்பேத்கர் தன்னையும் புத்தமதத்தைத் தழுவுமாறு கேட்டுக் கொண்டதாகவும், தான் அதற்குப் பணிவுடன் தனது மறுப்பைத் தெரிவித்ததாகவும் கூறுகிறார். புத்தமதத்தைத் தழுவியபின் சாதி ஒழிப்பின் பகுதியாக, இந்து மதத்தையும் அதன் உருவங்களையும் கடுமையாகத் தாக்குவது இயலாது என்றும், ஆனால் என்றுமே புத்தமதத்தை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொள்வதாகவும் கூறுகிறார் (ப.திருமாவேலன் – ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? – 194). அவருக்கே உரிய அதிரடியான பாணியில் தமிழக மக்கள் மானமும் அறிவும் இன்றி புத்தரின் தர்மத்தை ஏற்றுக்கொள்ளத் தவறிவிட்டார்கள் என்றும் முட்டாள் அரசர்களும் ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழகத்தில் புத்தமதத்துக்கு இருந்திருக்கக் கூடிய வரலாற்று இடத்தை அழித்தொழித்து விட்டார்கள் என்றும் குற்றம்சாட்டுகிறார். (Aloysius – Periyar on Buddhism, 34–35) இஸ்லாம் மதத்தின் மீதும் பெரியாருக்குக் கனிவு இருந்தாலும் திராவிடர் கழகத்தின் அரசியலுக்கு முன்னுதாரணமாகப் புத்தரையே கண்டதால் புத்தமதத்தின் மீது அவருக்குத் தனி ஈடுபாடு இருந்தது. முன்பே குறிப்பிட்டது போல் புத்தமதம் பகுத்தறிவினை அடிப்படையாகக்கொண்டதே இதற்கு முக்கிய காரணம். (Aloysius – Periyar on Buddhism 17) அம்பேத்கரின் தொடர்பு ஏற்பட்டது பெரியாரின் புத்தமதச் சார்புக்கு முக்கிய பங்களித்திருக்கும் என்றால் மிகையாகாது.

6 டிசம்பர் 1956 அன்று அம்பேத்கர் மறைந்தபோது திராவிடர் கழகம் நடத்திய மற்றொரு நாளிதழான ‘விடுதலை’யில் பெரியார் அம்பேத்கருக்கு எழுதிய அஞ்சலிக் கட்டுரை வெளியானது. அதில், “உலகின் மிக உன்னதமான கல்வியாளர்களில் முக்கியமானவர் அம்பேத்கர்” என்றும் “அம்பேத்கருக்குப் பின் அவருக்கு நிகரானதொரு தலைவரைக் காண முடியாது” என்றும் அத்தலித் தலைவரின் அறிவாற்றல், பகுத்தறிவின்பால் அவருக்கிருந்த மாறாத பற்று, புத்தமதத்தைத் தழுவியது ஆகியவை குறித்துப் புகழ்ந்து எழுதி இருந்தார். (ப.திருமாவேலன் – ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? – 198–199)

திராவிடர் கழகத்தின் அதிகாரபூர்வமான அஞ்சலி அறிவிப்பில் **“அம்பேத்கர் குறிப்பாக தலித் மக்களுக்கான பெருந்தலைவராக அறியப்பட்டாலும்கூட, அவர் மிகச் சிறந்த சிந்தனையாளரும், பகுத்தறிவுவாதியும் ஆவார்” என்று போற்றியது. மேலும், புரட்சிகரமான கருத்துகளை அனைவரையும் சென்றடையும்படி ஆங்கிலத்தில் எழுதியமைக்காக அம்பேத்கரைக் கொண்டாடியது** (Anaimuthu – Thoughts of Periyar E.V.R – 1934).

1963இல் இந்த மண்ணின் தலைசிறந்த மக்கள் தலைவருக்கு நன்றி பாராட்டும் பொருட்டு தமிழர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு அம்பேத்கரின் பெயரைச் சூட்டுமாறு பெரியார் வலியுறுத்துகிறார். (ப.திருமாவேலன் – ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? – 201) தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தலித்துகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த பார்ப்பனரல்லாத சமூகங்களின் முன்னேற்றத்துக்கு அம்பேத்கரும் திராவிட இயக்கமும்தான் காரணமென்று பெரியார் உறுதியாக நம்பினார். பெரியார் தன் இறுதி வரை இந்தக் கருத்துகளைக் கொண்டிருந்தார்.

அக்டோபர் 1973இல் தனது மறைவுக்கு இரண்டு மாதங்களுக்கு முன் நிகழ்த்திய ஓர் உரையில், டாக்டர் அம்பேத்கர் அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கும் சுயமரியாதையை வென்றெடுத்தார் என்றும் அவர் கற்பித்தவற்றை முறையாகப் பின்பற்றி இருந்தால் இந்து மதம் திணித்த மூடநம்பிக்கைகளை ஒரேயடியாக ஒழித்திருக்கலாம் என்றும் ஆதங்கப்படுகிறார். (ப.திருமாவேலன் – ஆதிக்க சாதிகளுக்கு மட்டுமே அவர் பெரியாரா? – 202)

பெரியார் அம்பேத்கரின் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்ததோடு இந்தியா முழுவதும் தலித்துகளுக்கான ஒரே தலைவராக மட்டுமன்றி, ஒடுக்கப்பட்ட பிற சமூகத்தினர் அனைவருக்குமே வழிகாட்டியாக அம்பேத்கரைக் கண்டுணர்ந்தார். இனிவரும் பகுதிகளில் தமிழகத்தில் தலித்தியத்தைப் பெரியார் எவ்வாறு அணுகினார் என்று பார்ப்போம்.

(தொடரும்)

**நன்றி: விலாசினி**

**தொடர்ச்சி நாளை காலை 7 மணி பதிப்பில்**

[பகுதி 1](https://minnambalam.com/politics/2020/07/20/20/periyar-ambedkar-dali-politics-special-article)�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share