பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு முதல்வர் தொடங்கி பல்வேறு கட்சித் தலைவர்களும் வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.
**முதல்வர் ஸ்டாலின்**
முதல்வர் ஸ்டாலின் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளிடம் பேசினார். அற்புதம்மாளுக்குத் தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின், வணக்கம்மா, நல்லாருக்கீங்களாமா.. என கேட்டதும், நல்லாருக்கேன்பா… எவ்வளவு ஏமாற்றம்… உங்களைப் பார்க்க வர்றேன்… குடும்பத்தோடு வர்றேன்” என்று கூறினார். பின்னர் முதல்வர் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
அதுபோன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரறிவாளன் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்குத்தான் அனைத்து உரிமைகளும் உள்ளது என்று வாதிட்டோம். கிடைத்த வாய்ப்பு அனைத்தையும் பயன்படுத்தி மாநில அரசுக்கு அரசியல் சட்டம் வழங்கி உள்ள 161 ஆவது பிரிவு உரிமையை நிலைநாட்டினோம். இதனையே தங்களது மையக் கேள்வியாக உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் அவர்களும் எழுப்பினார்.
இது அமைச்சரவையின் முடிவு அதில் ஆளுநருக்கு முடிவெடுக்கும் சுதந்திரமான இடம் உள்ளதா? ஏன் மத்திய அரசுக்கு அனுப்பினார்? அவர் மாநில அரசின் பிரதிநிதியா? ஆளுநருக்கு சில விலக்குகள் உள்ளன. ஆனால் இதுபோன்ற விஷயங்களில் எந்த உத்தரவையும் நிறைவேற்ற முடியாது. இந்த வழக்கில் ஆளுநருக்குச் சுதந்திரமான விருப்புரிமை ஏதேனும் உள்ளதா? மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது ஏன்?” என்று அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினார் நீதிபதி நாகேஸ்வரராவ் அவர்கள். அந்த வகையில் மாநில அரசு தனது உரிமையை நிலைநாட்ட எடுத்த முயற்சிகள் அனைத்துக்கும் இறுதி வெற்றி கிடைத்துள்ளது.
தன் மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் களைந்திட எந்த எல்லை வரை சென்றும் போராடத் தயங்காத திருமதி அற்புதம்மாள் அவர்கள் தாய்மையின் இலக்கணம் பெண்மையின் திண்மையை அவர் நிரூபித்துக் காட்டி இருக்கிறார். சட்டத்தின் ஷரத்துகளை வெல்லும் திறன் ஒரு துளி நியாயமான கண்ணீருக்கு உண்டு என்பதைக் காலம் காட்டி இருக்கிறது. அற்புதம்மாளுக்கு என் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
**ஓபிஎஸ் ஈபிஎஸ்**
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, “ ராஜிவ் கொலை வழக்கில் எழுவர் விடுதலைக்காக, அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதற்காக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகள், எடுத்து வைத்த சட்ட நுணுக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
அதுபோன்று அதிமுக அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்றைய தீர்ப்புக்கு முக்கிய அடித்தளமாகும். இது முழுக்க முழுக்க அதிமுகவுக்குக் கிடைத்த வெற்றி. பேரறிவாளனை விடுவித்துள்ள அதே சமயத்தில் மற்ற 6 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளனர்.
**பாமக நிறுவனர் ராமதாஸ்**
பேரறிவாளனின் விடுதலை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அதையும் கடந்து குரலற்றவர்களுக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 6 பேர் விடுதலைக்காகச் சட்ட நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். அவர்கள் விடுதலை செய்யப்படும் வரை முருகன், சாந்தன், ஜெயக்குமார், இராபர்ட் பயஸ் ஆகிய நால்வரையும் பரோலில் விடுதலை செய்ய வேண்டும். இவர்கள் மட்டுமின்றி 34 ஆண்டுகளாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் உள்ளிட்ட நீண்ட காலமாகச் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் அனைவரையும் 161-ஆவது பிரிவின்படி விடுதலை செய்யத் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டு இருந்தாலும் கூட, அவர் இழந்த அவரது வாழ்க்கையின் மிக முக்கியமான கால கட்டமான 31 ஆண்டுகளை எவராலும் திருப்பி அளிக்க முடியாது. இனி பேரறிவாளன் அவரது இயல்பு வாழ்க்கையையும், இல்லற வாழ்க்கையையும் குடும்பத்தினருடனும், நண்பர்களுடன் தொடங்க வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
**திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி**
இன்று (18.5.2022) வெளிவந்துள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு – வரலாற்றில் மிகவும் சிறப்புடன் என்றென்றும் பாராட்டப்படும் முக்கியத் தீர்ப்பு –
மனித உரிமை வரலாற்றில் இது மறக்கப்பட முடியாத – மறுக்கப்பட முடியாத ஓர் அருமையான நல்ல தீர்ப்பு. அரசமைப்புச் சட்ட அமைப்பின்மீது வெகுமக்களுக்கும், சட்ட நிபுணர்களுக்கும் பெருத்த நம்பிக்கையை உறுதிப்படுத்தும் மனிதநேயம் பொங்கும் தீர்ப்பு இது!
ஆளுநர்கள் – அவர்களை இயக்கும் அதிகார வர்க்கம் அரசமைப்புச் சட்டத்தின்படி நேர்மையாகச் செயல்படவேண்டும் என்ற பாடத்தை – அதை மறந்தவர்களுக்கு நினைவுபடுத்திடும் அருமையான அரசமைப்புச் சட்டத்திற்கான விளக்கத்தைத் தந்துள்ள தீர்ப்பு இது!
உச்சநீதிமன்ற அமர்வு நீதியரசர்கள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோருக்கு நமது பாராட்டுகள்!
**பாஜக தலைவர் அண்ணாமலை**
பேரறிவாளனை உச்ச நீதிமன்றம், அரசியல் அமைப்புச் சட்டம் 142-ன் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்திருக்கும் தீர்ப்பை பாஜக ஏற்றுக் கொள்கிறது. நம் ஒற்றுமையும், பாதுகாப்பையும், ஒருமைப்பாட்டையும் சமரசம் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்காது என்றும் நம்புகின்றோம்.
**மதிமுக தலைவர் வைகோ**
31 ஆண்டுகளாக, இந்த ஏழு பேரும் துன்ப இருளில் வாடி வதங்கி விட்டார்கள். இழந்ததை இனி அவர்கள் மீண்டும் பெற முடியாது. இப்போது, உச்சநீதிமன்றம் நீதியை நிலைநாட்டி இருக்கின்றது; மகிழ்ச்சி. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது போலவே, மற்ற ஆறு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
**விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்**
தாயின் இடையறாத சட்டப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. காலம் தாழ்ந்த தீர்ப்பு என்றாலும் இறுதியில் அறம் வென்றுள்ளது. இளமைக் காலத்தைப் பறிகொடுத்துள்ள பேரறிவாளனுக்கு உரிய இழப்பீடு, மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்.
**தேமுதிக தலைவர் விஜயகாந்த்**
அற்புதம்மாள் தனது மகனை மீட்டெடுத்துள்ளார். மற்ற 6 பேரையும் விரைவில் விடுக்க வேண்டும்.
**மநீம தலைவர் கமல்ஹாசன்**
ஆயுள்தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும்.
**சசிகலா**
அம்மா அவர்கள் கடந்த 2014ம் ஆண்டில் ஏழு நபர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சூளுரைத்தார். அன்று அம்மா விதைத்த விதைக்குக் கிடைத்த பலனாகத்தான் இதை நான் பார்க்கிறேன். இன்று பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
**அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்**
ஆளுநர் போன்ற பதவியிலிருப்பவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவை மதித்துச் செயல்படவேண்டியதன் அவசியத்தை இத்தீர்ப்பு உறுதிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது.
தாமதிக்கப்பட்ட நீதி; மறுக்கப்பட்ட நீதி’ என்பதை உணர்ந்து எதிர்காலத்திலாவது இத்தகைய பிரச்சினைகளில் அதிகாரத்தில் இருப்பவர்கள் உரிய நேரத்தில் முடிவெடுக்கவேண்டும். பேரறிவாளனைத் தொடர்ந்து எஞ்சிய 6 தமிழர்களும் விரைவில் விடுதலை செய்யப்படவேண்டும்.
இவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
**-பிரியா**