எழுவர் விடுதலை வழக்கில் ஆளுநருக்கு ஒரு வாரம் உச்ச நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், விரைவில் நல்ல முடிவு வரும் என்று எதிர்பார்ப்பதாக துணை முதல்வர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்த நிலையில், இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் ஆளுநர் இதுவரை முடிவெடுக்கவில்லை. ஆளுநர் காலதாமதம் ஏற்படுத்துவதற்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் விடுதலை தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம்,. பேரறிவாளன் விடுதலை தொடர்பான பரிந்துரை மீது ஆளுநர் ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்க வேண்டும் என கால அவகாசம் வழங்கியது.
இது தொடர்பாக இன்று (ஜனவரி 23) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சிறையிலிருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் முதலில் அறிவித்ததும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைத்ததும் அம்மா அவர்களும், அம்மாவின் அரசும் தான்.
7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அம்மா அரசின் உறுதியான நிலைப்பாடு. விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
**- பிரியா**
�,”