தடுப்பூசி மீது மக்கள் நம்பிக்கை வைப்பது அவசியம்!

Published On:

| By Balaji

கொரோனா தடுப்பூசியால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மகளிர் கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தை சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான விஜயபாஸ்கர் உட்பட அதிமுக வேட்பாளர்கள் பார்வையிட்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,” நடிகர் விவேக் மரணம் மிகவும் அதிர்ச்சியான சம்பவம். அவருடைய மறைவுக்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் விவேக் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கும், அவரின் இறப்புக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என சுகாதாரத் துறை செயலாளர் மற்றும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படாது. அரசு துறை, மருந்து, மருத்துவர்கள் மீது மக்கள் நம்பிக்கை வைப்பது அவசியம். தடுப்பூசிகளின் பாதுகாப்பு குறித்த வதந்திகளுக்கு மக்கள் செவிசாய்க்காமல் இருப்பது நல்லது.

மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட 55.85 லட்சம் தடுப்பூசிகளில் 47.05 லட்சம் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. மீதம் 8.8 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் நாளொன்றுக்கு 2 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகின்றன. குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியம்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், கொரோனா பணிகளை செய்ய இயலவில்லை. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனுடன் தொலைபேசியில் தொடர்புக் கொண்டு தமிழகத்தின் நிலைப்பற்றி எடுத்துக் கூறி, ரெம்டெசிவிர் மருந்துகளை தடையின்றி வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டேன்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட வழிமுறைகளை மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். அலட்சியமாகவும், அஜாக்கிரதையாகவும் இருந்தால், வரக் கூடிய அடுத்த 3 வாரங்களும் நமக்கு சவாலாக அமைந்துவிடும்” என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 9,344 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பலனின்றி 39 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

**வினிதா**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share