�பட்டியலினத்தவர்களே இல்லாத ‘தனி’ வார்டு: தேர்தலைப் புறக்கணிக்கும் மக்கள்!

politics

கடலூரில் பட்டியலினத்தவர்களே இல்லாத வார்டை தனி வார்டாக தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதால், தேர்தலைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர் அப்பகுதி பொதுமக்கள்.

கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் ஒன்றியத்தில் உள்ள ஶ்ரீநெடுஞ்சேரி ஊராட்சியில் ஒன்பது வார்டுகளில் 3,707 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆறு வார்டுகள் பட்டியல் இனத்தவர்களுக்கும், மூன்று வார்டுகள் பொதுவானவை என்றும் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

பட்டியலின மக்களே இல்லாத ஆறாவது வார்டு, பட்டியலின பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த அந்த வார்டு பொதுமக்கள் தேர்தல் ஆணையத்தைக் கண்டித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ராமமூர்த்தியிடம் பேசினோம்…

“428 வாக்காளர்களைக்கொண்ட எங்களுடைய ஆறாவது வார்டில் ஒருவர்கூட பட்டியலினத்தைச் சேர்ந்தவர் இல்லை. அப்படி இருக்க எங்களது வார்டை எப்படி பட்டிலினத்தோர் வார்டாக அறிவிக்க முடியும். அதனால்தான் ஆறாவது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்யவில்லை. தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியரிடம் எங்கள் கோரிக்கையை வைத்தோம். ஆனால், அவரோ செவிகொடுத்துகூட கேட்காமல் அலட்சியப்படுத்தி வருகிறார். உண்மையிலேயே தேர்தல் ஆணையம் என்பது இருக்கிறதா என்ற சந்தேகம்தான் எங்களுக்கு எழுகிறது” என்று ஆவேசமானார்.

இதற்குப் பதில் பெறுவதற்காக அப்பகுதி தேர்தல் அலுவலரைத் தொடர்புகொண்டோம். அவரோ, “மொத்தமுள்ள ஒன்பது வார்டில் ஐந்து தனி வார்டும், நான்கு பொது வார்டும் பிரிக்கப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். அதில் ஏதேனும் குளறுபடிகள் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக தேர்தலைப் புறக்கணிப்பது தவறு” என்றவரிடம், பட்டியலினத்தவர்களே இல்லாத வார்டில் எப்படிப் போட்டியிட முடியும் என்று கேட்டபோது, “மற்ற வார்டுகளில் உள்ள பட்டியலினத்தவர்கள் வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம், போட்டியிடலாம். ஆனால் வேட்பு மனுத் தாக்கல் செய்யும்போது ஆறாவது வார்டைச் சேர்ந்த இரண்டுபேர் முன்மொழியவேண்டும்” என்று தெரிவித்தார்.

இதுபோன்ற வார்டு வரையறை, இட ஒதுக்கீடு குளறுபடிகள் பல இடங்களில் நடந்திருப்பதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *