�பெகாசஸ்: மோடி அரசின் அமைச்சர்களும்,ஆர்.எஸ்.எஸ்.தலைவர்களும் கண்காணிப்பில்!

Published On:

| By Balaji

இஸ்ரேலிய ஸ்பைவேர் மூலம் இந்தியாவிலுள்ள பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், ஏன் நீதிபதிகள் கூட கண்காணிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தி வயர் இணைய தளம் செய்தி வெளியிட்டு அதிர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. குழுமத்தின் நவீன உளவு சாஃப்ட்வேரான பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம்தான் இந்தக் கண்காணிப்பு நடந்திருக்கிறது. அந்த நிறுவனமோ, “எங்களது நிறுவனத்தின் ஸ்பைவேர் உலகத்தில் இருக்கும் பல அரசுகளுக்கு மட்டும்தான் விற்கப்படுகிறதே தவிர தனியார் நிறுவனங்களுக்கு இல்லை” என்று தெரிவித்துள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் இந்த ஸ்பைவேர் மூலம் இந்திய அரசுதான் ஒட்டுக் கேட்டிருக்கிறது என்ற கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி இந்த பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டிருக்கிறார் என்றும் செய்திகள் வருகின்றன.

பெகாசஸ் மூலமாக இந்திய எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் பிறரின் தொலைபேசி எண்கள் கசிந்த தரவுத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. இது பெகாசஸ் ஹேக்கிங் மென்பொருளைப் பயன்படுத்தி சட்டவிரோத இணைய கண்காணிப்பை உறுதிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்த கண்காணிப்புப் பட்டியலை தி வயர் ஆராய்ந்தபோது தரவுத்தளத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் 40 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், மூன்று முக்கிய எதிர்க்கட்சி நபர்கள், ஒரு அரசியலமைப்பு அதிகாரத்திலுள்ள நபர், நரேந்திர மோடி அரசாங்கத்தில் பணியாற்றும் இரண்டு அமைச்சர்கள், தற்போதைய மற்றும் முன்னாள் தலைவர்கள் உள்ளனர் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் அதிகாரிகள், ஆர்.எஸ்.எஸ்.தலைவர்கள் மற்றும் ஏராளமான வணிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த பட்டியலில் உள்ள டஜன் கணக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் பெயர்களை தி வயர் வெளிப்படுத்தியது, இதில் வயர் நிறுவனத்தின் நிறுவனர் சித்தார்த் வர்தராஜன் மற்றும் எம்.கே.வேணு, தி இந்துவைச் சேர்ந்த விஜய்தா சிங், இந்துஸ்தான் டைம்ஸின் ஷிஷிர் குப்தா, அத்துடன் பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் அரசியல் கைதிகள் மற்றும் உறவினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நண்பர்கள் என பட்டியல் நீள்கிறது.

மேலும் அதிர்ச்சிகரமாக ஒரு நீதிபதியின் எண்ணும் இந்த ஹேக்கிங் பட்டியலில் இருக்கிறது. ஹேக்கிங் காலத்தில் நீதிபதி அதைப் பயன்படுத்துகிறாரா என்பதை இன்னும் சரிபார்க்கவில்லை என்றாலும்,தற்போதைய உச்சநீதிமன்ற நீதிபதியின் பெயரில் பதிவு செய்யப்பட்ட எண்ணும் அந்த தரவுத்தளத்தில் இருக்கிறது என்று வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஸ்பைவேரின் படி அலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்பது ஒருவகை என்றால், சம்பந்தப்பட்ட நபரின் அலைபேசி. லேப் டாப் ஆகியவற்றை ஹேக்கிங் செய்து அதிலுள்ள விவரங்களைக் கைப்பற்ற முடியும். அப்படித்தான் இந்தப் பட்டியலில் உள்ளவர்களின் போன், லேப்டாப் ஆகியவை அண்மைக் காலங்களில் ஹேக்கிங் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

வயரின் சித்தார்த் வர்தராஜன், பத்திரிகையாளர்கள் பரஞ்சோய் குஹா தாகூர்தா மற்றும் சுஷாந்த் சிங் மற்றும் எஸ்.என்.எம் அப்தி, டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் சையத் அப்துல் ரஹ்மான் கிலானி ஆகியோரின் அலைபேசிகள் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஹேக் செய்யப்பட்டதாக தெரிகிறது.

முன்னாள் டிவி 18 தொகுப்பாளரான ஸ்மிதா ஷர்மா மற்றும் தி இந்துவின் விஜய்தா சிங் ஆகியோரின் தொலைபேசிகள் ஹேக்கிங் முயற்சிகளைக் காட்டவில்லை என்று வயர் தளத்தின் கட்டுரை கூறுகிறது.

தி இந்துவின் விஜய்தா சிங் இதுகுறித்து, “இந்த ஒட்டுக்கேட்பு உண்மை என்றால் இது உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிரான தனியுரிமை மீறலாகும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவைத் தவிர, அஜர்பைஜான், பஹ்ரைன், ஹங்கேரி, கஜகஸ்தான், மெக்ஸிகோ, மொராக்கோ, ருவாண்டா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த பட்டியலில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

**-வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share