ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பொருளாதார நெருக்கடிகள், புலம் பெயர் தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்சினை ஆகியவை குறித்து பொருளாதார ஆராய்ச்சியாளரும், சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான ஜெ.ஜெயரஞ்சன் நாள்தோறும் மின்னம்பலம் யூ ட்யூப் சேனல் வழியாக பகிர்ந்து வருகிறார். சில நாட்களாக பிரதமரின் பொருளாதாரத் தொகுப்பு குறித்து தனது விமர்சனப் பார்வைகளை முன்வைத்து வந்தார்.
அந்த வகையில் இன்று (மே 18) ஜெயரஞ்சன் பேசுகையில், “பொருளாதார தொகுப்புத் திட்டத்தின் கீழ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறிவிப்புகளை வெளியிட்டார். இறுதி நாளான நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது, புலம்பெயர் தொழிலாளர்களை ராகுல் சந்தித்த புகைப்படம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, நிதியமைச்சர், ‘புலம்பெயர் தொழிலாளர்களுடன் அமர்ந்திருந்ததற்கு பதிலாக அவர்களுடைய பைகளை சுமந்துகொண்டு சென்று, சொந்த ஊர்களில் அவர்களை விட்டிருக்கலாமே’ என்று கூறுகிறார். இது எனக்கு மிகவும் அதிர்ச்சியளித்தது” என்று குறிப்பிடுகிறார்.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அவசியமானது மூன்று வேளை உணவும், சொந்த ஊர் திரும்புவதற்கான நடவடிக்கையும்தான் என்று குறிப்பிடும் ஜெயரஞ்சன், “புலம்பெயர் தொழிலாளர்களின் துயரைத் துடைப்பதற்கு பதிலாக, அவர்களை சந்திப்பவர்களை எள்ளி நகையாடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அரசியலில் இருக்கிறோம், பொது சேவையில் இருக்கிறோம் என்ற நினைவு கூட இல்லாமல் அதிகார மமதையில் பேசுவது ஜனநாயகத்திற்கு அழகல்ல. வெங்காய விலை உயர்வுக்கு, நாங்கள் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று மேட்டுக்குடி பார்வையில் பதிலளித்தவர்தான் இவர்” என்று விமர்சிக்கிறார்.
மேலும், “பசியின் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் நடக்கும்போதே இறந்தாலும் பரவாயில்லை என்று நடந்து செல்கிறார்கள். 50 நாட்களாக ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர். ஆனால், இதனால் பாதிக்கப்படுபவர்கள் தங்களது சொந்தப் பொறுப்பில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், எவ்வளவு கொடுத்தாலும் அவர்களுக்குப் போதாது என்றும் கூறுகிறார்.
தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் முன்னெடுத்த அரசியல்தான் பசியில்லாத சமூகத்தை உருவாக்கியுள்ளது. ஆக, இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுக்கு பசிக்கிறது என்று சொல்வது எந்த அரசியலை நாம் முன்னெடுக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. இத்தனை கோடி புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து செல்லும் இந்த நேரத்தில்தான் உண்மையிலேயே சிஸ்டம் சரியில்லை என்று சொல்ல வேண்டும்” என்றும் குறிப்பிடுகிறார்.
அவரது முழு உரையையும் கீழே உள்ள காணொளியில் காணலாம்.
**எழில்**
�,”