எம்பி வேண்டுமா? மத்திய அமைச்சர் வேண்டுமா? குமரியில் பாஜக பிரச்சாரம்

Published On:

| By Balaji

தமிழக சட்டமன்றத் தேர்தலோடு கன்னியாகுமரி மக்களவைத் தேர்தலுக்கும் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.

கொரோனா பாதிப்பால் கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் உறுப்பினரும் தமிழக காங்கிரஸ் செயல் தலைவருமான வசந்தகுமார் கடந்த வருடம் காலமானார். இதையடுத்து குமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் சட்டமன்றத் தேர்தலோடு நடக்கிறது.

பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், இத்தொகுதியில் எட்டுமுறைக்கு மேல் போட்டியிட்டவருமான பொன்.ராதாகிருஷ்ணன் களம் காண்கிறார். காங்கிரஸ் சார்பில் மறைந்த எம்பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுகிறார்.

இங்கே பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில், “ஏற்கனவே தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு அத்தனை எம்பிக்களையும் கொடுத்துவிட்டீர்கள். அதனால் தமிழகத்துக்கு என்ன பயன்? இந்த முறை புத்திசாலித்தனமாக யோசித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களியுங்கள். அதனால் கன்னியாகுமரிக்கும் தமிழகத்துக்கும் மோடி அமைச்சரவையில் ஒரு மத்திய அமைச்சர் கிடைப்பார். உங்களுக்கு வெறும் காங்கிரஸ் எம்பி வேண்டுமா? பாஜகவின் மத்திய அமைச்சர் வேண்டுமா என்பதை முடிவு செய்யுங்கள்”என்று பாஜகவினர் மக்களிடம் கூறி வருகின்றனர்.

இதை வலுப்படுத்தும் வகையில் ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில், “ 2014-2019 முதல் நான் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் நான் குமரியிலும் தமிழகத்திலும் ஆரம்பித்த வளர்ச்சித் திட்டங்கள் தொடர வேண்டுமென்பதே எங்கள் நோக்கம் . நான் குமரி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் நான் மத்திய அமைச்சரவையில் ஒரு பகுதியாக இருப்பேன் என்று கட்சித் தலைவரும் உள்துறை அமைச்சரும் ஏற்கனவே மக்களிடம் தெரிவித்திருக்கிறார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share