பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குரு பூஜை நிகழ்வு இன்று (அக்டோபர் 30) நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்றைய தினமே எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் மதுரை வந்தனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் இன்று காலை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பசும்பொன் கிராமத்திற்குச் சென்று, முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதுபோலவே கோரிப்பாளையத்திலுள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக தலைவர் ஸ்டாலின், நினைவிடத்தில் மாலை வைத்து, மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “விடுதலைப் போராட்ட வீரரான தேவர் பெருமகனார் ஜெயந்தி தினமான இன்று, பசும்பொன் வந்து அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது மகிழ்வளிக்கிறது. தமிழ்ப்பற்று, விவசாயிகள் நலன், சமுதாய ஒற்றுமைக்காகப் பாடுபட்ட அவர் காட்டிய பொதுவாழ்வில் தூய்மையை மீட்டெடுக்க தேவர்ஜெயந்தியில் உறுதியேற்போம்” எனச் சுட்டியுள்ளார்.
எனினும், பசும்பொன் செல்லும் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackStalin என்ற பெயரில் ட்விட்டரில் ஹாஷ் டேக் டிரெண்டானது. முத்துராமலிங்கத் தேவர் தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்கள் எனத் தெரிவித்ததாகவும், இரண்டையும் நம்பாத திமுகவின் தலைவர் ஸ்டாலின் எதற்கான நினைவிடம் வருகிறார் எனவும், ஸ்டாலின் ஓட்டு வங்கி அரசியலுக்காக அஞ்சலி செலுத்துவதாகவும் ட்விட்டரில் குற்றம்சாட்டி பதிவிடப்பட்டுள்ளது.
இதேபோல முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. அமமுகவைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், “எடப்பாடி பழனிசாமி அவர்களே…அரசியலுக்காக தாய் இறந்து 30 நாள் சடங்குகள் முடியாத நிலையில் பசும்பொன் வந்து தேவர் பக்தர்களின் இறை நம்பிக்கையை புண்படுத்த வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், “நீங்கள் வருடம் வருடம் பசும்பொன் வருபவர் அல்ல…அரசியல் என்பது வேறு எங்களின் இறைநம்பிக்கை என்பது வேறு.” என்றும் அவர் கூறியுள்ளார்.
**எழில்**�,