கொரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத் தொடர் வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் தேதி தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையை கூட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்ட நிலையில்… செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 1 வரை மழைக் கால கூட்டத் தொடரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் வந்திருக்கின்றன.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்திருக்க வேண்டும் அவையின் கேலரிகள், அறைகள் அனைத்தையும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிஜிட்டல் திரைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் 1952 க்குப் பிறகு இதுபோன்ற ஒரு ஏற்பாடு நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். இரு அவைகளும் மொத்தம் 18 அமர்வுகள் நடக்கலாம் என்று அமைச்சரவை குழு பரிந்துரைத்திருக்கிறது.
ஜூலை 17 ம் தேதி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாநிலங்களவை தலைவரும் துணைக் குடியரசுத் தலைவருமான எம்.வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் மழைக்கால கூட்டத் தொடர் நடத்துவதற்கான பல்வேறு அம்சங்களை விரிவாக ஆராய்ந்தனர். அப்போது ஆகஸ்ட் மூன்றாம் வாரத்திற்குள் அமர்வுக்கான தயாரிப்புகளை முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள். அதன்படியே மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் ஏற்பாடுகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கின்றன. இரு அவைகளும் வழக்கமாக ஒரே நேரத்தில் செயல்பட்டு வந்தன. ஆனால் இந்த முறை அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக, ஒரு அவை காலை நேரத்திலும் மற்றொன்று மாலையிலும் இயங்குமாறு திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுப் பரவலால் இரு அவைகளும் மார்ச் 23 அன்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஆறு மாதங்களுக்குள் அவை கூட்டப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் நாடாளுமன்றம் விரைவில் கூடுகிறது,
**-வேந்தன்**�,