நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020இல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்கள் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டன. குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டது.
இந்த ஆண்டு நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரும் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களைக் கருத்தில்கொண்டு பாதியிலேயே முடித்துக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், இன்று மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி 19 நாட்கள் நடைபெறவுள்ளது.
இதை முன்னிட்டு பிரதமர் மோடி தலைமையில் நேற்று (ஜூலை 18) டெல்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “எம்.பி.க்கள் மதிப்புமிக்க ஆலோசனைகளை இங்கே தெரிவித்தனர். இரு அவைகளிலும் அர்த்தமுள்ள விவாதம் நடைபெற வேண்டும். பரிந்துரைகளைக் கூட்டாக அமல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
ஆரோக்கியமான ஜனநாயகம் என்ற நமது மரபின் அடிப்படையில், மக்கள் தொடர்பான பிரச்சினைகள் சுமுகமான முறையில் எழுப்பப்பட வேண்டும், இந்த விவாதங்களுக்குப் பதில் அளிக்க, அரசுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இந்த உகந்த சூழலை ஏற்படுத்துவது அனைவரது பொறுப்பு. மக்கள் பிரதிநிதிகள் கள நிலவரத்தை உண்மையிலேயே அறிய வேண்டும், அப்போதுதான், விவாதத்தில் அவர்களின் பங்களிப்பு, முடிவு எடுக்கும் முறையைச் சிறப்பாக்கும். எம்.பி.க்கள் பலர் கோவிட் தடுப்பூசி போட்டுள்ளதால், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையுடன் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உதவும். இந்தக் கூட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு அனைத்து கட்சித் தலைவர்களின் ஒத்துழைப்பும் தேவை” என்று அழைப்பு விடுத்தார்.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், சமாஜ்வாதி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், அகாலி தளம் என 33 அரசியல் கட்சி தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் இன்று தொடங்கவுள்ள கூட்டத்தொடரில், பல்வேறு பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்ப எம்.பி.க்கள் திட்டமிட்டுள்ளனர்.
தமிழக எம்.பி.க்கள் நீட், மேகதாது, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, காவல் மரணங்கள், நியூட்ரினோ திட்டம், தமிழகத்துக்கான கொரோனா தடுப்பூசி, மருத்துவப் படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு அகில இந்திய இட ஒதுக்கீடு, விவசாயிகள் பிரச்சினை, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்பத் திட்டமிட்டுள்ளனர்.
அதுபோன்று, உத்தரப்பிரதேச அரசு அறிமுகம் செய்துள்ள மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதா, சமூக ஆர்வலர் ஸ்டேன் சுவாமியின் மரணம், தேசத்துரோக வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்து, வேளாண் சட்டங்கள், விலைவாசி உயர் எனப் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பிரச்சினை எழுப்பத் திட்டமிட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு கொரோனா காரணமாகக் காலை மாலை என இருவேளை நடந்த கூட்டத்தொடர் இந்த முறை காலை 11 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் 2 நிதி விவகாரங்கள் உள்பட 31 மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன.
**-பிரியா**
�,