நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வரும் 11ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது முதல், டெல்லி வன்முறை தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 4 நாட்களாக எந்த விவாதங்களோ, அலுவல்களோ நடைபெறவில்லை.
மக்களவை இன்று (மார்ச் 6) கூடியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து டெல்லி வன்முறைக்குப் பொறுப்பேற்று அமித் ஷா பதவிவிலக வேண்டுமெனவும், பிரதமர் மோடி அவைக்கு வந்து பதிலளிக்க வேண்டுமென முழக்கங்கள் எழுப்பினர். அவர்களை இருக்கைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியும் அமளி நீடித்ததால் அவையை நடத்திவந்த கீர்த்தி சோலங்கி, நண்பகல் 12 மணி, பிற்பகல் 2 மணி என இரு முறை ஒத்திவைத்தார். தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்கள் எழுப்பியதால் மார்ச் 11ஆம் தேதி அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதுபோலவே மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, அவை சுமூகமாக செயல்பட ஆளுங்கட்சி உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் தங்களுக்குள் விவாதித்து ஒரு நல்ல அர்த்தமுள்ள தீர்வுக்கு வருமாறு கேட்டுக்கொண்டார். எனினும், எதிர்க்கட்சித் தரப்பில் தொடர்ந்து அமளி நீடித்ததால் அவையை மார்ச் 11ஆம் தேதி காலை 11 மணிக்கு வெங்கய்ய நாயுடு தள்ளிவைத்தார்.
7,8 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிறு விடுமுறை, அதற்கடுத்து 9,10 தேதிகளில் ஹோலி பண்டிகைக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் 11ஆம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது.
முன்னதாக காங்கிரஸைச் சேர்ந்த 7 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட அக்கட்சியின் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தின் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
**எழில்**
�,