Qஇன்று நாடாளுமன்றம் கூடுகிறது!

politics

உக்ரைன் மீதான போர், இந்தியர்கள் மீட்பு, 5 மாநில தேர்தல் முடிவு என பரபரப்பான சூழலில் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி தொடங்கி நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 29ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். இதையடுத்து பிப்ரவரி 11ஆம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதி இன்று தொடங்கி நடைபெற உள்ளது.
இன்றைய கூட்டத்தொடரில் ஜம்மு-காஷ்மீருக்கான நிதி நிலை அறிக்கையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்வார். அதன் மீதான விவாதமும் இன்று நடைபெற உள்ளது.
அதே சமயத்தில் உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்பது குறித்து அவையில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசை வலியுறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களின் எதிர்காலம் குறித்தும் கேள்வி எழுப்ப உள்ளன.

நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற வியூகம் வகுக்கும் குழுவின் கூட்டத்தை தொடர்ந்து மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், வேலையில்லா திண்டாட்டம், வைப்புநிதி வட்டி குறைப்பு, விவசாய விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ஆகிய பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அதுபோன்று இந்தக் கூட்டத்தொடரில் ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 8ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.
**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *