zஎதிர்க்கட்சிகள் அமளி: இருஅவைகள் ஒத்திவைப்பு!

Published On:

| By Balaji

எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் குடை பிடித்தபடி பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது, “ இந்திய மக்கள் அனைவரும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும். தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக் கொண்டால் ’பாகுபலி’ போல் பலசாலி ஆகலாம். இதுவரை 40 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் ‘பாகுபலி’ ஆகிவிட்டனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவை விரட்ட வேண்டும்.

மழைக்காலக் கூட்டத் தொடருக்கு அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அமைதியான முறையில், ஆக்கபூர்வமாக நாடாளுமன்ற விவாதங்களை நடத்த வேண்டும். எதிர்கட்சிகளை சேர்ந்தவர்கள் எவ்வளவு கடினமான கேள்விகளையும் கேட்கலாம். அதற்கு விளக்கமளிக்க அரசை அனுமதிக்க வேண்டும். அனைத்து விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், பதிலளிக்கவும் ஒன்றிய அரசு தயாராக உள்ளது.

உலகம் முழுவதும் தொற்றுநோய் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது குறித்து நாடாளுமன்றத்தில் அர்த்தமுள்ள விவாதங்களை நாங்கள் விரும்புகிறோம். இது ஜனநாயகத்தை உயர்த்தும், மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் மற்றும் வளர்ச்சியின் வேகத்தை மேம்படுத்தும்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று(ஜூலை 19) காலை 11 மணிக்கு தொடங்கியது.

அப்போது, மக்களவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட 4 பேர் பொறுப்பேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு சபாநாயகர் ஓம்பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழில் பதவியேற்றுகொண்ட விஜய் வசந்த் , பெருந்தலைவர் காமராஜரின் புகழ் வாழ்க, ராஜிவ் காந்தி வாழ்க என்று பேசினார்.

இதையடுத்து, புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து கொண்டிருந்தபோது, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட தொடங்கினர். இதனால் அமைச்சர்களின் அறிமுகத்தை பிரதமர் அறிக்கையாக தாக்கல் செய்ததையடுத்து, பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

அதுபோன்று மாநிலங்களவையிலும், இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், பிற்பகல் 12.24 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் வந்தனர்.பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதகைகளை தங்கள் உடம்பில் கட்டிக் கொண்டு கோஷங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

**-வினிதா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share