பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி அரசு மீது நடந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஓ.பன்னீர் செல்வம், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இவர்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டுமென திமுக கொறடா சக்கரபாணி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, “இந்த விஷயத்தில் திமுக கொறடா சபாநாயகரிடம் கொடுத்த மனு மீது ஏன் மூன்று வருடங்களாக சபாநாயகர் நடவடிக்கை ஏதும் ஏடுக்கவில்லை? சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு நோட்டீஸ் கூட ஏன் வழங்கவில்லை? மூன்று ஆண்டு தாமதம் தேவையற்றது” என கருத்து தெரிவித்தனர். எனினும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டுமென சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது எனக் குறிப்பிட்டு வழக்கினை முடித்துவைத்தனர்.
இந்த நிலையில் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களிடமும் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் இன்று (மார்ச் 9) நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ஏன் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தீர்கள் என்பது உள்ளிட்ட சில கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதற்கு பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விளக்கம் அளிப்பதை பொறுத்து அவர்கள் மீதான நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, ஆட்சிக்கு ஆதரவாகவே செயல்பட்டுவருவதாக பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விளக்கம் அளிக்க வாய்ப்புள்ளது. இதனை ஏற்று பெரும்பாலும் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பில்லை என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
**எழில்**
�,