xபன்னீர் ஓட்டிய மாட்டு வண்டியில் பாஜக வண்ணமா?

Published On:

| By Balaji

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பொங்கல் திருநாளை தனது சொந்த மாவட்டமான தேனியில் கொண்டாடினார்.

பொங்கல் அன்று ஜனவரி 14ஆம் தேதி அவரது பிறந்த நாள் என்பதால்… இரட்டை கொண்டாட்டமாக அமைந்தது. பிரதமர் உள்ளிட்ட உயர் பதவியினர் வாழ்த்து முதல் வீடு தேடி வந்த அதிமுக தொண்டர்களின் வாழ்த்து வரை பெற்றுக்கொண்ட ஓபிஎஸ் உற்சாகமாக இருந்தார்.

அடுத்த நாள் ஜனவரி 15ஆம் தேதி மாட்டுப் பொங்கலோடு முல்லை பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் பென்னி குயிக் பிறந்த நாள் என்பதால் தேனி மாவட்டத்தில் கொண்டாட்டம் அதிகமாகவே இருந்தது.

பென்னிகுயிக் மணிமண்டபத்துக்கு மாலை அணிவித்து அவரது உருவப் படங்களுக்கும் மலர் தூவி பொங்கல் வைப்பது தேனி மாவட்டத்தின் வழக்கம். அவர் அணை கட்டியதன் மூலம் தண்ணீர் வந்ததால்தான் விவசாயமே நடக்கிறது என்பதால் அந்த நன்றி கடனுக்காக பென்னி குயிக் பொங்கலென்றே மாட்டுப் பொங்கலுக்கு இங்கே பெயர்.

இந்த வகையில் போடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலார்பட்டி கிராமத்தில் சுற்றுலாத் துறை சார்பில் பென்னி குயிக் பிறந்தநாள் விழா அரசு விழாவாகக் கொண்டாட அதில் கலந்து கொள்வதற்காக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார்.

முன்னதாக லோயர் கேம்ப் பகுதியில் உள்ள பென்னி குக்கின் மணிமண்டபத்துக்குச் சென்று அங்கே அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பாலார்பட்டி வந்தார் ஓபிஎஸ்.

கிராமத்து மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஒயிலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், கட்டைக்கால் ஆட்டம் என கலை வடிவங்களை அரங்கேற்றி துணைமுதல்வரை வரவேற்றனர். மாட்டுப் பொங்கல் என்பதால் மாட்டு வண்டியில் ஏறி வருமாறு அவரை அழைத்தனர்.

மக்களின் அழைப்பை ஏற்று பச்சை தலைப்பாகையோடு மாட்டு வண்டியில் ஏறி அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓட்டி வந்தார் ஓபிஎஸ். அப்போது மாட்டு வண்டியின் இருமருங்கிலும் அதிமுக கொடி வண்ணத்தில் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்க…

இரண்டு மாடுகளின் கொம்புகளில் காவியும் பச்சையும் பளிச்சென தெரியுமாறு அதாவது பாஜகவின் கொடி வண்ணத்தில் காளைகளின் கொம்புகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இதைப் பார்த்துவிட்டு துணைமுதல்வருக்கு நெருக்கமான வட்டாரத்தில் நாம் கேட்கும்போது… பொங்கலிலும் பாலிடிக்ஸ் பண்றீங்களா? ஆறு வண்ணங்களில் கொடி கட்டி இருக்கோம் சார். உங்க கண்ணுக்கு காவியும் பச்சையும் தான் தெரியுதா” என்று சிரித்தனர்.

இந்த மாடுகளின் கொம்புக் கொடி வண்ணமே பாலார்பட்டியில் பாலிடிக்ஸ் விவாதத்துக்கும் வழிவகுத்துவிட்டது.

**வேந்தன்**�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share