பன்னீர் சொன்ன பகவத் கீதை:எடப்பாடி தரப்பின் பதில் கீதை!

politics

தமிழ்நாட்டு அரசியலில் பகவத் கீதையை பாஜக கூட அதிகம் பயன்படுத்தியதில்லை. ஆனால் அதிமுகவுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியில் பகவத் கீதை இப்போது பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே நடந்துவரும் மோதலின் முடிவு அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

இதற்கிடையே இன்று (அக்டோபர் 5) காலை ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகவத் கீதையின் புகழ்பெற்ற வாக்கியங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.

**எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!**

**எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!**

**எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்**” என்று அந்த ட்விட்டை முடித்திருந்தார் பன்னீர் செல்வம்.

இன்று காலை இந்த ட்விட் பரபரப்பான செய்தியாக சேனல்களில் ஓடிக் கொண்டிருக்கும்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களிடம் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். பிறகு அவரை கேபி. முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் சந்தித்தனர்.

இந்த ஆலோசனை பரபரப்புக்கு நடுவே எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் வேண்டிய அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகியிடம் நாம் பேசினோம், பன்னீரின் இந்த பகவத் கீதை பற்றி நாம் அவரிடம் கேட்டபோது,

“சார்… என் நலன் கருதி பெயர் வெளியிட வேண்டாம். ஆனால் என் கட்சி நலன் கருதி என் கருத்தை வெளியிடுங்கள்” என்று நம்மிடம் கோரிக்கை வைத்தார். “சரி சார்…உங்கள் கருத்தை சொல்லுங்கள்” என்றோம்.

“எங்கள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் பகவத் கீதையின் புகழ் பெற்ற வரிகளில் பாதியைதான் தன் கருத்தாக இன்று வெளியிட்டிருந்தார். ஆனால் கண்ணபிரான் அதற்கு அடுத்து கூறிய வரிகள்தான் பன்னீருக்கு மிகவும் கச்சிதமாய் பொருந்தக் கூடியவை. ஆனால் அதை வசதியாக பன்னீர் மறந்துவிட்டார். இதோ அந்த வரிகள்…

**உன்னுடையதை எதை இழந்தாய்?**

**எதற்காக நீ அழுகிறாய்?**

**எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?**

**எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?**

**எதை நீ எடுத்துக் கொண்டாயோ**,

**அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது**,

**எதை கொடுத்தாயோ**,

**அது இங்கேயே கொடுக்கப்பட்டது**

**எது இன்று உன்னுடையதோ**,

**அது நாளை மற்றொருவருடையதாகிறது**

**மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்**

என்பதையும் பன்னீர் புரிந்துகொள்ள வேண்டும். ” என்று நம்மிடம் கூறினார் அந்த தலைமைக் கழக நிர்வாகி,

இந்த கீதையின் மறு பக்கத்தை எடப்பாடியிடமும் கூறியிருக்கிறார் அந்த தலைமைக் கழக நிர்வாகி. பரபரப்பான இந்த நேரத்திலும் இந்த பதிலைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

இந்த கீதாசாரத்தின் கடைசி இருவரிகள் இருவருக்கும் பொருந்தும்.

**-ஆரா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *