துணை முதல்வர் பதவி ராஜினாமா! பன்னீர் கிளப்பிய அடுத்த புயல்!

politics

அதிமுகவுக்குள் மீண்டும் இடி இடிக்க தொடங்கியுள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதி நடந்த அதிமுகவின் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்குமிடையே கடுமையான வார்த்தை மோதல்கள் வெடித்தன.

இந்த ஆட்சிக்கு எதிராக ஓட்டுப்போட்டு துரோகம் செய்தவர் நீங்கள்தான் என்று பன்னீரை நோக்கி எடப்பாடி பகிரங்கமாக செயற்குழு கூட்டத்தில் குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் மறுத்ததை தொடர்ந்து இருவருக்குமிடையே கடுமையான வார்த்தை பிரயோகங்கள் நடைபெற்றன.

இதையடுத்து நேற்று இரவு தொடங்கி நள்ளிரவு வரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது வீட்டில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரோடு முக்கிய ஆலோசனை நடத்தினார். இதுபற்றி மின்னம்பலம் இதழில் இன்று காலை செய்தி வெளியிட்டிருந்தோம்.

இந்த ஆலோசனையில் ஈடுபட்ட கே.பி. முனுசாமி இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்றார். ‌ இருவருக்குமிடையே கடைசி கட்டமாக சமரசத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார் கே.பி.முனுசாமி.

ஆனால் பன்னீர்செல்வம் கடும் கோபத்தில் இருந்துள்ளார். இன்று காலை தன்னை சந்தித்த முனுசாமி, மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரிடம், அவர் பொதுக்குழுவை கூட்டி பார்த்துக்கலாம்னு எந்த தைரியத்தில் சொல்றாரு. பொதுக்குழுவை யார் கூட்ட முடியும்? ஒருங்கிணைப்பாளர் நான்தானே கூட்ட முடியும்?” என்று கேட்ட பன்னீர்செல்வம்…

“நான் எப்போதும் என்னை அடிப்படையாக வைத்து முடிவு எடுக்கிறது இல்ல. கட்சி நலன் அடிப்படையா வெச்சுதான் முடிவெடுத்தேன். அன்னிக்கு எந்த நோக்கத்திற்காக தர்மயுத்தம் ஆரம்பிச்சேனோ, அது அப்புறம் வெற்றி அடைஞ்சதா இல்லையா… அந்த தர்மயுத்தத்தின் பலனை எடப்பாடி தானே அனுபவிக்கிறாரு? நான் ஒரு முடிவு பண்ணிட்டேன்” என்றபடி இன்று காலை 11. 30மணிக்கு தன் காரில் இருந்த தேசியக் கொடியை தன்னுடைய உதவியாளரை விட்டு கழற்றச் சொல்லி விட்டார் பன்னீர்செல்வம்.

கே.பி. முனுசாமி எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் ஓ. பன்னீர்செல்வம் தன் முடிவிலிருந்து பின்வாங்குவதாக இல்லை என்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனை கூட்டம் இரண்டையுமே ஓ பன்னீர்செல்வம் புறக்கணித்துள்ளார்.

பன்னீர்செல்வம் தனது காரில் இருந்து தேசியக்கொடியை கழற்றிய தகவலறிந்து அவர் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று மதியம், ஏற்கனவே அமைச்சரவையிலிருந்து எடப்பாடி பழனிச்சாமியால் நீக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் பன்னீர்செல்வத்தை சந்தித்துள்ளார். இன்று மாலை வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் பன்னீர்செல்வம் வீட்டுக்குச் சென்று அவரோடு பேசியிருக்கிறார்.

காரில் இருந்து தேசியக் கொடியை கழற்றியதன் பின்னால்… துணை முதலமைச்சர் பதவியை பன்னீர்செல்வம் ராஜினாமா செய்யும் முடிவில் இருக்கிறார் என்கிற தகவல் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

இதையடுத்து தன்னை சமாதானப்படுத்த நிர்வாகிகள் பலரும் வருவார்கள் என்றும் அதன்மூலம் எடப்பாடிக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்றும் கருதுகிறார் பன்னீர்செல்வம்.

**வணங்காமுடி**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *