குழந்தை திருமணங்களை தடுக்க பஞ்சாயத்து அளவில் குழு!

Published On:

| By Balaji

குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதற்காக பஞ்சாயத்து அளவிலான குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென்று அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையத்தை ஆய்வு செய்து, அங்குள்ள வசதிகள் குறித்தும் அதிகாரிகளிடம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் கேட்டறிந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,” தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 361 சிறுவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கென்று, அன்பு ஆசிரமம், லசால் பள்ளி, முகத்துக்குவியல் குழந்தைகள் மையம், அடைக்கலாபுரம் குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஆகிய நான்கு இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதும் கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை, தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 72 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். தொடர்ந்து வருவாய்த் துறை மூலம் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஊரடங்கில் அதிக குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதற்காக மாவட்ட அளவில் பஞ்சாயத்து குழுக்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் பஞ்சாயத்து தலைவர், கிராம நிர்வாக தலைவர், ஒரு ஆசிரியர், ஒரு பெண் உறுப்பினர் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்படும்.

இத்தகைய திருமணங்களை நடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறையில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப் பிரிவை பலப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்ட சமூக நல ஆர்வலர், குழந்தை பாதுகாப்பு ஆர்வலர் உள்ளிட்டோர் அளிக்கும் ரிப்போர்ட் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இனிவரும் நாட்களில் நடவடிக்கை கடுமையாக இருப்பதால், குழந்தைகள் திருமணங்கள் குறையும்” என தெரிவித்தார்.

**-வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share