பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம், இம்ரான் கானை பிரதமர் பதவியில் இருந்து விலக வைத்துள்ளது.
தனது பதவி விலகலுக்குப் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக இம்ரான் கான் குற்றம்சாட்டினாலும், எதிர்க்கட்சிகள் தேவையான எண்ணிக்கையைத் திரட்டியதே அவர் விலகுவதற்கு காரணமாக அமைந்தது.
1947இல் பாகிஸ்தான் உருவானது முதல் எந்தப் பிரதமரும் முழு பதவிக்காலம் நீடித்தது இல்லை எனும் சாதனையை இம்ரான் கான் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படாத நிலையில், இப்போது அவர் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பதவியிழந்த முதல் பிரதமர் ஆகியிருக்கிறார்.
பெரும்பாலான பிரதமர்கள் சதிக் குற்றச்சாட்டின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளனர். நாட்டின் உச்ச நீதிமன்றமும் அதிகாரத்தில் இருப்பவர்களுடன் இணைந்து செயல்பட்டு, அரசியல் சாசனத்துக்கு எதிரான செயல்களுக்கு சட்ட அங்கீகாரம் அளித்துள்ளன. இவற்றுக்கு பின்னே எப்போதுமே பாகிஸ்தான் ராணுவம் முக்கிய சக்தியாக இருந்திருக்கிறது.
இந்தக் கட்டுரை முதலில் வெளியான பிறகு, சமூக ஊடக விவாதங்களில் நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பிரதமருக்கு பதவிக்காலம் இருப்பது இல்லை, நாடாளுமன்றத்துக்குத்தான் என வல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். பெரும்பான்மை பலம் இருக்கும் வரை பிரதமர் பதவியில் இருக்கலாம்.
*லிகாயத் கான்*
கடந்த 75 ஆண்டுகளில் பாகிஸ்தானில் முழு பதவிக்காலம் நீடிக்காத பிரதமர்களின் பட்டியல் இதோ:
பாகிஸ்தான் இயக்கத்தின் முக்கியப் புள்ளியான லிகாயத் கான் நாட்டின் முதல் பிரதமராகப் பதவியேற்றார். 1951இல் அவர் ராவல்பிண்டியில் பேரணியில் உரையாற்றியபோது ஆப்கானிஸ்தான் நாட்டவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மறைவுக்குப் பின் அந்த இடம் லியாகத் பாக் என அழைக்கப்படுகிறது. 50 ஆண்டுகள் கழித்து அதே இடத்தில் பெனாசிர் பூட்டோ சுட்டுக்கொல்லப்பட்டார்.
முதல் பிரதமர் மறைவுக்குப் பிறகு, கவர்னர் ஜெனரலாக இருந்த கவாஜா நிஹாமுதின் பிரதமரானார். அவர் ஓராண்டு, 182 நாட்கள் மட்டும் பதவியில் இருந்த நிலையில், லாகூர் மற்றும் கிழக்கு பாகிஸ்தான் கலவரம் காரணமாக பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் ராஜாங்க அதிகாரியான முகமது அலி போக்ரா அதிக காலம் நீடித்தார். அவர் அமெரிக்காவுடனான உறவை உண்டாக்கியவராகக் கருதப்படுகிறார். கவர்னர் ஜெனரலாக பதவி வகித்த குலாம் முகமதுவால் தேர்வு செய்யப்பட்டிருந்தாலும், கவர்னர் ஜெனரல் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் இந்திய சுதந்திர சட்டம் 1954இல் அவர் திருத்தம் கொண்டு வர முயன்றபோது, அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டது.
இதனிடையே ராணுவ தளபதி அயூப் கான் ராணுவ அமைச்சராக இருந்த அமைச்சரவையை நடத்தும் நிலை போக்ராவுக்கு உண்டானது. 1955இல் முஸ்லிம் லீக் தோற்றாலும், போக்ரா கூட்டணி ஆட்சி அமைத்தார். ஆகஸ்ட் மாதம் அவர் ராஜினாமா செய்தார்.
சவுத்ஹரி முகமது அலி தலைமையில், 1956இல் பாகிஸ்தானுக்கு புதிய அரசியல் சாசனம் கிடைத்தது. டொமினியன் அந்தஸ்து முடிவுக்கு வந்து கிழக்கு மற்றும் மேற்கு பாகிஸ்தானுக்கு சம அந்தஸ்து உறுதி அளிக்கப்பட்டது.
1956 செப்டம்பரில், சவுத்ஹரி பதவி விலகுமாறு அதிபரால் கேட்டுக் கொள்ளப்பட்டார். அவரைத் தொடர்ந்து ஹுசைன் சாஷீத் சுஹாராவார்டி பிரதமராகி, 13 மாதங்கள் நீடித்தார்.
அதன் பிறகு, பாகிஸ்தான் குடியரசானபோது, 1957இல் முஸ்லிம் லீக்கின் இப்ராகிம் இஸ்மாயில் பிரதமரானார். இரண்டு மாதங்களில் அவர் கூட்டணிக் கட்சிகளின் நம்பிக்கை இழந்தார்.
ராணுவ தளபதி அயூப் கான் ராணுவ ஆட்சியை 1958இல் கொண்டு வருவதற்கு முன் பிரதமராக இருந்த பெரோஸ் கான் நூன் 10 மாதங்கள் நீடித்தார்.
*ஜுல்பிகார் அலி பூட்டோ*
வங்கதேச விடுதலைப் போருக்குப் பிறகு, கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த நூருல் அமீன் தளபதி யாயா கானால் நியமிக்கப்பட்டார். ஆனால் பாகிஸ்தான் தோல்விக்குப் பிறகு யாயா கான் விலகியதால், ஜுல்பிகார் அலி பூட்டோவிடம் அதிபர் பதவி அளிக்கப்பட்டது. நூருல் அமீன் 13 நாட்கள் பதவி வகித்த நிலையில் நீக்கப்பட்டு, பின்னர் துணை அதிபரானார்.
1973 அரசியல் சாசனம் அமலுக்கு வந்த பிறகு பூட்டோ அதிபர் பதவியில் இருந்து விலகி, நாடாளுமன்றப் பெரும்பான்மை பெற்று பிரதமரானார். 1977 தேர்தலில் அவர் மீண்டும் பிரதமரானார். ஜூலை மாதம் முகமது ஜியா நடத்திய ஆட்சி கவிழ்ப்பில் அகற்றப்பட்டார். 1979இல் தூக்கிலிடப்பட்டார். பிரதமராக நான்கு ஆண்டுகளுக்கும் குறைவாக இருந்தார்.
1985 கட்சிகள் அல்லாத தேர்தலுக்குப் பிறகு முகமது கான் ஜுனேஜோ ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள், இரண்டு மாதங்கள் தாக்குப்பிடித்த நிலையில் அவர் அகற்றப்பட்டார்.
*பெனாசிர் பூட்டோ*
1988இல் ஜியா மரணத்துக்குப் பிறகு, பெனாசிர் பூட்டோ தேர்தலில் வென்று பிரதமரானார். 1989இல் அவர் கண்டன தீர்மானத்தை வென்றார். 1990இல் அவரது அரசு அகற்றப்பட்டது.
*நவாஸ் ஷெரிப்*
தேர்தலில் வெற்றி பெற்ற நவாஸ் ஷெரிப் பாகிஸ்தானின் 12ஆவது பிரதமரானார். சட்ட திருத்தம் மூலமான அதிகாரம் மூலம் அதிபர் குலாம் கான் தேசிய சபையைக் கலைத்தார். நவாஸ் ஷெரிப் உச்ச நீதிமன்றம் சென்று வெற்றி பெற்றார். எனினும், ராணுவ நெருக்கடி காரணமாக ஜூலை மாதம் பதவி விலகினார்.
1993 தேர்தலில் வெற்றி பெற்று பெனாசிர் பூட்டோ மீண்டும் பதவிக்கு வந்தார். அவரால் அதிபராக்கப்பட்ட பரூக் லெகாரி, 1996 நவம்பரில் பூட்டோவை பதவியில் இருந்து நீக்கினார். 1997 தேர்தலில் வெற்றி பெற்று நவாஸ் ஷெரிப் மீண்டும் பதவிக்கு வந்தார். 1999இல் ராணுவ தளபதி முஷாரப் ஆட்சி கவிழ்ப்பு மூலம் அவரை அகற்றினார்.
முஷாரப் கீழ் பாகிஸ்தான் ஜாபருல்லா கான், ஷுசாஜ் ஹுசைன் மற்றும் சவுகத் அசீஸ் உள்ளிட்ட மூன்று பிரதமர்களைக் கண்டது. 2008இல் தேர்தலில் வெற்றி பெற்று கிலானி பதவிக்கு வந்தார். இந்தக் காலத்தில் அரசியல் சாசனம் 58 2 பிரிவின் கீழ் அதிபரின் அதிகாரம் நாடாளுமன்றத்தால் திரும்பப் பெறப்பட்டது.
அதிபர் ஜர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்கு தொடர்பாக உத்தரவிட்டதால், பதவிக்காலம் முடியும் முன்னரே அவர் 2012 ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
பர்வேஸ் ஷரப் 2013 வரை பதவியில் இருந்தார்.
2013 தேர்தலில் வெற்றி பெற்று நவாஸ் ஷெரிப் மூன்றாவது முறையாக பதவிக்கு வந்தார். எனினும் பனாமா பேப்பர் விவகாரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு 2018இல் பதவி விலகினார்.
2018 தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாகிஸ்தான் தாரிக் இ இன்சாப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், கூட்டணி ஆட்சி அமைத்தார்.
*
நன்றி:[ தி வயர்]( https://thewire.in/south-asia/as-imran-khan-faces-confidence-vote-heres-how-every-former-pakistan-pm-was-shunted-out-of-power)
தமிழில்: சைபர் சிம்மன்
.