பாகிஸ்தானின் பிரதமராக இருந்த இம்ரான்கான் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கிரிக்கெட் வீரராக இருந்து அரசியலில் நுழைந்த இம்ரான் கான் கடந்த 2018ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் ஆனார். இந்நிலையில் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு இம்ரான் கான் அரசின் நிர்வாகத் திறமையின்மைதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. பாகிஸ்தான் பாராளுமன்றத்தைக் கலைத்து அதிபர் ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார். ஆனால் இது செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுடன், இம்ரான் கான் அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நடத்த உத்தரவிட்டது.
இதையடுத்து நேற்று நள்ளிரவு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் இம்ரான் கான் கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சாப் கட்சியைச் சேர்ந்த 51 எம்.பி.க்கள் பங்கேற்றனர். அப்போது, சபாநாயகர் ஆசாத் குவைசர், துணை சபாநாயகர் ஹாசிம் சூரி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்த நிலையில், எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியைச் சேர்ந்த அயாஸ் சாதிக் அவைக்குத் தலைமை தாங்கினார்,
சுமார் நள்ளிரவு 1.30 நடந்த வாக்கெடுப்பில் இம்ரான்கான் தோல்வியுற்றார். அவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த பிரதமர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதன்படி புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காகப் பாகிஸ்தான் பாராளுமன்றம் நாளை கூடுகிறது. இதனை முன்னிட்டு புதிய பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்கள் இன்று மதியம் 2 மணிக்குள் சமர்ப்பிக்கப்படலாம் என்றும் பிற்பகல் 3 மணிக்குள் ஆய்வு செய்யப்படும் என்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது அவைக்குத் தலைமைத் தாங்கிய பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கை சேர்ந்த அயாஸ் சாதிக் தெரிவித்துள்ளார்.
தேசிய சட்டமன்றம் என்று அழைக்கப்படும் பாகிஸ்தானின் பாராளுமன்ற ட்விட்டர் பக்கத்தில் நாளை மதியம் 2 மணிக்கு அவை கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச்சூழலில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) தலைவர் ஷெபாஸ் ஷெரீப் நாளை பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள இவரைப் பிரதமராக்க எதிர்க்கட்சிகள் தேர்வு செய்துள்ளன.
1950 ஆம் ஆண்டு லாகூரில் ஒரு தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்த ஷெபாஸ் ஷெரீப், மூன்று முறை பதவி வகித்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர் ஆவார். பாகிஸ்தானின் முக்கியமான பஞ்சாப் மாகாணத்தின் முதல்வராக ஷெபாஸ் ஷெரீப் மூன்று முறை பதவி வகித்துள்ளார்.
பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகளின் விருப்பப்படி ஷெபாஸ் ஷெரீப்பின் பெயரைப் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி மார்ச் 30 அன்று எதிர்க்கட்சிகளின் கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
**-பிரியா**