வடமாநிலங்களில் அதிதீவிரமாக வளர்ந்துள்ள பாரதிய ஜனதா கட்சி, தென்மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் கால்பதிக்க கடும் முயற்சி செய்து வருகிறது. வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக அடுத்தபடியாக மூன்றாவது கட்சியாக உருவெடுப்பது தொடர்பாக ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபடியாக சட்டமன்ற வேட்பாளரை வெற்றிபெற வைக்கும் மாவட்டத் தலைவருக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என பாஜக மாநிலத் தலைவர் முருகன் அறிவித்துள்ளார்.
இதனிடையே பாஜக தலைவராக முருகன் பொறுப்பேற்ற பிறகு திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் என்கிற பெரிய பொறுப்பில் இருந்த வி.பி.துரைசாமி, பாஜகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து தற்போதைய ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினரான கு.க.செல்வம், பாஜக தேசிய தலைவர் நட்டாவைச் சந்தித்தார். அதிகாரபூர்வமாக கட்சியில் இணையாமல், அதேநேரம் பாஜக ஆதரவாளராகச் செயல்பட்டு வருகிறார்.
இதுபோலவே மற்ற கட்சிகளில் அதிருப்தியிலும், ஓரங்கட்டப்பட்டும் உள்ள முக்கிய பிரமுகர்களை தன்வசப்படுத்தும் பணிகளையும் பாஜக தீவிரப்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக பாஜக வட்டாரங்களில் விசாரித்தோம்…
“திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, பாமகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களைத் தொடர்புகொண்டு பேசி அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக உறுதி தந்து, கட்சிக்குக் கொண்டுவர திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாவட்ட, ஒன்றிய, மாநில நிர்வாகிகளையும் சிட்டிங் பொறுப்பில் உள்ளவர்களையும் பேசி வளைத்து அழைத்துவந்து கட்சியைப் பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது, மாற்றுக் கட்சியில் உள்ள நிர்வாகிகள் யார் யார் அதிருப்தியில் இருக்கிறார்கள், பொருளாதார சிக்கலில் இருக்கிறார்கள், அவர்களுக்கு மக்கள் செல்வாக்கு எந்த அளவுக்கு உள்ளது என்று மத்திய உளவுத் துறை மூலமாக ரிப்போர்ட் வாங்கி, அவர்களை பாஜக நிர்வாகிகள் மூலம் நேரடியாகச் சந்தித்து பேச வைக்கிறார்கள். முதற்கட்டமாக தேமுதிகவிலுள்ள முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிலரை பாஜகவில் இணைப்பதற்கு பாஜக தமிழக தலைமை ஏற்பாடுகள் செய்து வருகிறது” என்று தெரிவிக்கிறார்கள்.
**வணங்காமுடி**
�,