தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்து, இஸ்லாம், மற்றும் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் கூடுவதற்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்தது. ஆனபோதும் அந்த வழிபாட்டுத் தலங்களில் தினசரி பூஜைகள் நடப்பதற்கு எந்த தடையும் இல்லை என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
புரட்டாசி மாதம் என்பதால் இந்து மதத்தில் குறிப்பாக திருமால் கோவில்களில் சனிக் கிழமைகளில் கூட்டம் அலைமோதும். இது தொற்று பாதிப்புக்கு வழிவகுத்து விடக்கூடாது என்பதற்காக அரசாங்கம் இந்த முடிவை எடுத்தது. மேலும் புரட்டாசி மாதத்தின்
பிற்பகுதியில் நவராத்திரி திருவிழா வருவதால் அனைத்து திருக்கோவில்களிலும் கூட்டம் அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு இந்த தடை நீட்டிக்கப்பட்டது.
ஆனால், தமிழக பாரதிய ஜனதா கட்சி இந்தப் பிரச்சினையை இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையாக திமுக அரசின் மீது குற்றம் சாட்டி கடந்த 7ஆம் தேதி போராட்டங்கள் நடத்தியது. இதே நேரம் கிறிஸ்தவ இஸ்லாமிய வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு, கிழமைகளில் பக்தர்கள் கூடிட தடை விதிக்கப்பட்டது. அந்த மதத்தினரும் இந்த தடையை நீக்குமாறு தமிழக அரசிடம் வேண்டுகோள் வைத்து வந்தனர்.
இந்த நிலையில்தான் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநர் ரவியை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை பற்றிய புகார் மனுவை அளித்ததோடு ஆலயங்கள் திறப்பு விவகாரத்தில் தமிழக அரசு ஒன்றிய அரசின் மீது திசை திருப்புவதாகவும், இதுகுறித்து தமிழக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் 13ஆம் தேதி ஆளுநரை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். அப்போது மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் ஆளுநரிடம் விளக்கினார். இந்த சந்திப்பின்போது ஆலயங்களை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாமே என்று ஆளுநர் முதல்வரிடம் தெரிவித்ததாகவும் தகவல்கள் பரவின.
இதற்கு மறுநாள் அக்டோபர் 14 ஆம் தேதிதான் முதல்வர் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்வு செய்வது பற்றிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அதற்குப் பிறகு அரசு வெளியிட்ட அறிவிப்பில் வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் வழிபடலாம் என்றும் ஹோட்டல்கள் இரவு 11 மணி வரை செயல்படும் என்றும் அனுமதி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை அடுத்து பாஜகவினர் தங்கள் போராட்டத்தால்தான் தமிழக அரசு ஆலயங்களைத் திறந்திருக்கிறது என்று க்ளைம் செய்துகொண்டனர். மேலும், “களத்தில் இறங்கியது பாஜக மிரண்டுபோனது திமுக” என்று சமூக தளங்களில் பாஜகவினர் சமூக வலைதளங்களில் பரப்புரையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று அக்டோபர் 15 செய்தியாளரிடம் பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் இது தொடர்பாக கேட்கப்பட்டபோது, தமிழ்நாடு அரசுக்கு யாரிடமிருந்தும் எந்த அழுத்தமும் வரவில்லை. கட்டுப்பாட்டை இழந்து செல்லும் அரசுக்குத்தான் அழுத்தங்கள் தரப்படும். ஆனால் தமிழ்நாடு அரசு நீதிக்கான அரசு நேர்மைக்கான அரசு மக்களுக்கான அரசு. யாரும் தமிழக அரசுக்கு அழுத்தம் தர அவசியமில்லை.
இந்து மத பக்தர்கள் வேண்டுகோள் விடுத்ததுபோலவே பீட்டர் அல்போன்ஸ், ஜவாஹிருல்லா போன்றவர்களும் தங்களது வழிபாட்டு தளங்களில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர். அம்மக்கள் வேண்டுகோளினை மருத்துவர்களுடன் ஆலோசித்து அதன் பிறகு ஆலயங்களில் மக்களை அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. திருக்கோயில்களை வைத்து யாரும் அரசியல் செய்ய முடியாது” என்று தெரிவித்தார்.
இதே நேரம் கோட்டை வட்டாரத்தில் நம்மிடம் பேசிய சிலர், “கோயில்கள் திறப்பு விஷயத்தில் முதல்வருடனான சந்திப்பின்போது ஆளுநர் சில வார்த்தைகள் பேசி இருக்கிறார். அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஆளுநர் மூலமாக பாஜக அழுத்தம் கொடுத்திருக்கிறது. அதையடுத்தே ஆலயங்களில் பக்தர்களை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்கிறார்கள்.
**-வேந்தன்**
�,”