சசிகலா நடிப்புக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து வந்த பிறகு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று இன்று மரியாதை செலுத்தினார் சசிகலா. ஜெயலலிதா நினைவிடத்தில் கண்கலங்கி அஞ்சலி செலுத்தினார்.
இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெயக்குமார், “சசிகலாவுக்குக் கொடுக்கும் பில்டப் செயற்கையாக இருக்கிறது. இயற்கையாக இல்லை. அம்மா நினைவிடத்துக்கு லட்சக்கணக்கானோர் செல்கின்றனர். அவர்களில் சசிகலாவும் ஒன்று. அவர் அம்மா நினைவிடத்துக்குச் செல்வதால் எந்த பயனும் இல்லை. இது பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தாது. அவர் நினைப்பது நடக்கப்போவதில்லை.
அதிமுக யானை பலம் கொண்டது. அந்த வகையில் கொசு யானை மீது உட்கார்ந்து கொண்டு நான்தான் யானையைத் தாங்கி பிடித்துக்கொண்டிருக்கிறேன் என்று கூறினால், அது நகைச்சுவையாக உள்ளது.
17ஆம் தேதி தான் பொன் விழா. ஆனால் 16ஆம் தேதி அவர் செல்கிறார் என்பது தான் வியப்பாக உள்ளது.
கட்சிக் கொடியை வேண்டுமென்றே பயன்படுத்தி குழப்பம் விளைவிக்க முயல்கிறார் சசிகலா. அதிமுக கொடியைப் பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது.
சசிகலாவுக்கு டிடிவி தினகரன் வேண்டுமானால் அமமுகவில் நல்ல இடம் கொடுக்கலாம். அதில் எங்களுக்கு எதிர்ப்பு இல்லை. எங்கள் கட்சியில் அவருக்கு இடம் இல்லை. அதிமுகவைக் கைப்பற்றுவது என்பது பகல் கனவாகவே இருக்கும்.
சசிகலாவின் நடிப்புக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம். ஆஸ்கர் வழங்கும் அளவுக்கு நடித்தாலும் அதை மக்கள் நம்பமாட்டார்கள் என்று தெரிவித்தார்.
**-பிரியா**
�,