பன்னீர்செல்வம் வந்தால் முதல்வர் வேட்பாளரா? தினகரன்

politics

அமமுக தலைமையில் கூட்டணி அமையும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பி இரண்டாவது வாரம் நடந்துகொண்டிருக்கும் நிலையில், முன்பைப் போல தொடர்ந்து செய்தியாளர்களை அடிக்கடி சந்திக்க ஆரம்பித்துள்ளார் டிடிவி தினகரன்.

அந்த வகையில் இன்று (பிப்ரவரி 19) சென்னை தி. நகரில் செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டிருந்த டிடிவி தினகரன் வரும் சட்டமன்றத் தேர்தலில் அமமுகவின் தேர்தல் வியூகம் பற்றி சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.

பாஜக கூட்டணியில் அமமுக இடம்பெறுவது பற்றி டெல்லி தலைமைதான் முடிவு செய்யும் என்று பாஜக மாநில தலைவர் முருகன் கூறிய கருத்துக்கு, “அப்படியா?” என்று ரியாக்‌ஷன் காட்டிய தினகரன்,

“நாங்கள் அமமுக தலைமையில் நிச்சயம் கூட்டணி அமைப்போம். தேர்தலில் ஆளுங்கட்சிக்கும், திமுகவுகும் எதிரான மனநிலை மக்களிடம் நிறைய இருக்கிறது. அவர்களின் வாக்கு அமமுக கூட்டணிக்குக் கிடைக்கும். அமமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம். அதன் பின் அதிமுகவை மீட்போம்” என்று பதிலளித்தார் டிடிவி தினகரன்.

பாஜக உங்களிடம் கூட்டணி பற்றி பேசினார்களா என்ற கேள்விக்கு, “எங்களிடம் பாஜக பேசவில்லை. பாஜகவிடமும் நாங்கள் பேசவில்லை. பேசாமல் பொய் பேச முடியாது. மற்றபடி அத்தைக்கு மீசை முளைத்தால் என்றெல்லாம் கேள்வி கேட்டால் பதில் சொல்ல முடியாது”என்று பதில் கூறியுள்ளார்.

ஓ.பன்னீர் இப்போது கஷ்டமான மனநிலையில் இருப்பதாக தான் உணர்வதாகக் குறிப்பிட்ட தினகரன் பன்னீர் பரதனாக வந்தால் அவரை வரவேற்பதாகக் கூறியுள்ளார். நாளிதழ்களில் பன்னீர் செல்வத்தின் பரதன் விளம்பரம் பற்றி கருத்து தெரிவித்த தினகரன்,

“ஓ.பன்னீர் செல்வம் அன்று (2017 பிப்ரவரி மாதம்) அவசரப்படாமல் இருந்திருந்தால் அவரே தொடர்ந்து பரதனாக (முதல்வராக) இருந்திருப்பார். ஆனால் ராமனை விட்டுவிட்டு ராவணன் வசம் சென்றுவிட்டார் பரதன். இப்போதும் அவர் கஷ்டமான மனநிலையில்தான் இருப்பார் என்று என் உணர்வு சொல்கிறது. அவர் சசிகலாவோடு இணைய வந்தால் ஏற்றுக்கொண்டு வரவேற்போம். பரதனாகிவிட்டார் என்று நினைத்துக் கொள்வோம்”என்று கூறியுள்ளார்.

பன்னீர் செல்வம் சசிகலாவை ஆதரித்தால் அவரை பரதனாகிவிட்டார் என்று நினைத்துக் கொள்வோம் என்று தினகரன் கூறியதன் அர்த்தம்.. பன்னீர் செல்வத்துக்கு முதல்வர் வேட்பாளர் வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

**-வேந்தன்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.