அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வர்- துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அலுவலகத்தில் இருந்து இன்று (மே 16) காலை 10.30 மணி வாக்கில் தேனி மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு சென்றது.
“காலை 11 மணிக்கெல்லாம் முன்னாள் துணை முதல்வரின் போடி சட்டமன்ற அலுவலகத்துக்கு வந்துவிடுங்கள். உங்களை எல்லாம் சந்திக்க விரும்புகிறார்”என்று தகவல் தெரிவிக்க பத்திரிகையாளர்கள் பரபரப்பானார்கள்.
அண்மையில் அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்காக நடைபெற்ற கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் காரசாரமான விவாதம் நடைபெற்று ஒருகட்டத்தில் ஓ.பன்னீர் அந்தக் கூட்டத்தில் இருந்து வெளியே சென்றுவிட்டார். அதன் பின் அவர் சென்னையில் இருந்து தேனி வந்துவிட்டார்.
இந்த பின்னணியில் ஓபிஎஸ் அலுவலத்தில் இருந்து திடீரென அழைப்பு வந்தவுடன் பத்திரிகையாளர்கள் என்னமோ ஏதோ என வேகவேகமாக ஓபி எஸ் அலுவலகம் நோக்கிச் சென்றனர். அங்கே பத்திரிகையாளர்களுக்காக ஒரு வாகனம் காத்திருந்தது. ‘வாங்க எல்லாம் மேற்குத் தொடர்ச்சி மலை பக்கம் போகணும்”என்று சொல்லி அழைத்துச் சென்றனர்.
தேனி மாவட்டம் போடி மெட்டு பகுதியில் குட்டையடி, குரங்கணி உள்ளிட்ட பகுதிகளில் ட்வ் தே புயலின் தாக்கத்தால் கடுமையான காற்று நேற்று வீசியிருக்கிறது. இதனால் அப்பகுதிகளில் அதிகமாக இருக்கும் மாந்தோப்புகளில் அடுத்த வாரம் அறுவடைக்கு தயாராக இருந்த மாங்காய்கள் பொலபொலவென உதிர்ந்துவிட்டன. இதனால், விவசாயிகள் பெரும் வேதனையில் இருக்கிறார்கள். இந்தத் தகவல் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கிடைக்கவும்தான் உடனடியாக அந்த பகுதிகளைப் பார்வையிடக் கிளம்பியிருக்கிறார். அதற்காகவே பத்திரிகையாளர்களை வரச் சொல்லியிருக்கிறார்.
‘’ஓபிஎஸ்சால அரசியல் புயல் அடிக்கும்னு எதிர்பார்த்தா, ஏற்கனவே அடிச்ச புயலை ஒட்டி பார்வையிடுறதுக்காக போயிட்டிருக்கிறாரு”என்று பத்திரிகையாளர்கள் அந்த கவரேஜ் இடையே பேசிக் கொண்டார்கள்.
**-வேந்தன்**
�,”