2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 20 மளிகை பொருட்களுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பைத் தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதற்காக 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறியது.
ஆனால் கடந்த இரு ஆண்டுகளாகப் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப்பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த ஆண்டு, பணம் வழங்கப்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுடன் ரொக்க பணமும் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்குப் பதில் அளிக்கும் வகையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி, ‘ஏற்கனவே கொரோனா நிவாரண நிதியாக 4,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.
இந்த சூழலில் முன்னாள் துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், ‘பொங்கல் பண்டிகைக்குப் பணமும் வழங்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2020ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2,363 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு 5,604 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தலா 2,500 ரூபாய் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆனால் தற்போது ‘அதைச் செய்கிறேன் இதைச் செய்கிறேன்’ என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக ஏற்கனவே நடைமுறையில் உள்ள பொங்கல் நிதி உதவியைக் கைவிட்டுள்ளது. நடைமுறையில் இருக்கும் திட்டத்தைக் கைவிடுவோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாததை திமுக அரசு செய்திருக்கிறது. இதற்குப் பெயர்தான் சொல்லாததைச் செய்வோம் என்பது போலும்.
கடந்த ஆண்டு 5,604 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவியுடன் கூடிய பொங்கல் பரிசு தற்போது வெறுமனே 1,088 கோடியாக குறைக்கப்பட்டு விட்டது.
2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த சமயத்தில் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்தது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் வேலையின்றி தவிக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. தற்போதுதான் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அளிக்கப்பட்டு வந்த நிதி உதவியை நிறுத்துவது என்பது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் நிதியுதவி தொடர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பது ஏழை எளிய மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. புதிதாக எதுவும் செய்யவில்லை என்றாலும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்ற திட்டத்தையாவது தொடர வேண்டும்.
எனவே பொங்கல் திருநாளை முன்னிட்டு அளிக்கப்பட்ட நிதி உதவியான 2500 ரூபாயைத் தொடர்ந்து அளிக்கத் தமிழக முதல்வர் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
**-பிரியா**
�,”