மார்ச் 3 ஆம் தேதி இரவு திடீரென சென்னை.தி.நகரில் இருக்கும் சசிகலா, அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கப் போவதாக அறிக்கை ஒன்றை வெளியிட அதிமுக, அமமுக தொண்டர்கள் மட்டுமல்ல திமுக தொண்டர்களும் அதிர்ச்சியோடும் ஆச்சரியத்தோடும் பார்த்தார்கள்.
ஆனால் இந்த அறிவிப்பு வந்தவுடன் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி எந்த சலனத்தையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல், புன்னகைத்து வைத்தார்.
எடப்பாடி உரிய முறையில் சசிகலாவுக்கு அனுப்பி வைத்த மெசேஜ்தான் அவரது இந்த முடிவுக்குக் காரணம் என்பதை மின்னம்பலத்தில் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறோம்.
இதற்கு அடிப்படையான இரு காட்சிகள் இப்போது அதிமுக, பாஜக டாப் லெவலில் பரபரப்பாக விவாதிக்கப்படுகின்றன.
பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு… மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விழுப்புரம் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை திரும்புகிறார். அந்த நட்சத்திர ஹோட்டலில் அவரை சந்திக்க ஓ.பன்னீரும், எடப்பாடி பழனிசாமியும் சில நிமிடங்கள் முன்பே வந்து காத்திருக்கிறார்கள்.
இருவரும் சேர்ந்து சந்திப்பதற்கு முன்பாக சில நிமிடங்கள் ஓபிஎஸ் அமித் ஷாவை தனியாக சந்திக்க நேரம் கேட்கிறார். அமித் ஷாவுடன் தேசிய பொதுச் செயலாளர் சந்தோஷ் ஜி இருக்கிறார். அமித் ஷா, ‘என்ன ஓபிஎஸ் ஜி?’என்று கேட்கிறார்.
‘வரும் சட்டமன்றத் தேர்தலில் அமமுகவும், சசிகலாவும் நம்மோடு சேர்ந்தால்தான் தென் மாவட்டத்துல நம்மால வெற்றிபெற முடியும். ஒண்ணு ஓப்பனா சொல்றேன்… அவங்களை சேர்த்துக்கலைன்னா தேனி மாவட்டத்துல நானே வெற்றி பெறுவேனானு தெரியாது. நானே தோற்றுவிடக் கூடிய அபாயமும் இருக்கு. அதனால நாம அவங்களை கூட்டணிக்குள்ள வச்சிக்கறது நல்லது ஜீ’’ என்று அமித் ஷாவிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார் பன்னீர் செல்வம்.
பன்னீரிடம் புன்னகைத்துவிட்டு அடுத்து எடப்பாடி பழனிசாமியை அழைத்தார் அமித் ஷா. சில நிமிடங்கள் வேறு பேச்சுகள் பேசிவிட்டு, இந்த விவகாரம் பற்றி எடப்பாடி பழனிசாமியிடமே கேட்கிறார் அமித் ஷா.
“ஏற்கனவே நான் டெல்லியில உங்ககிட்ட சொன்னேன். இங்க நீங்க வந்திருந்தபோது உங்ககிட்ட சொன்னேன். அவங்களால நமக்கு எந்த லாபமும் கிடையாது. இரட்டை இலை சின்னம் நம்மகிட்ட இருக்கு. இரட்டை இலைங்குறது தமிழ்நாட்டு மக்கள்கிட்ட இருந்து பிரிக்க முடியாதது. கடந்த பத்து தேர்தல்களாக நமக்கு கிடைச்சிருக்கிற புள்ளி விவரத்தை வச்சி இதை நான் சொல்றேன். வேணும்னா தேர்தல் முடிஞ்சு இது உங்களுக்கு தெரியவரும். சசிகலாவால நமக்கு எந்த பிரச்சினையும் வராது. வேணும்னா நானே அவங்ககிட்ட பேசி அதை நான் உறுதிப்படுத்துறேன். மத்தபடி நாம தினகரனை சேர்த்தோம்னா அவர் எல்லாத்தையும் ஸ்பாயில் பண்ணிடுவாரு’ என்று சில நிமிடங்கள் விளக்கினார் எடப்பாடி.
ஜனவரி 18 ஆம் தேதி அமித் ஷாவை சந்தித்தபோது என்ன நிலையில் இருந்தாரோ அந்த நிலையில் இருந்து நூலளவு கூட தடம் மாறாமல் அமித் ஷாவிடம் விளக்கினார் எடப்பாடி.
இதன் பிறகு அமித் ஷா எடப்பாடியின் தோள்களில் தட்டி சிரித்ததோடு சரி… அதுபற்றி மீண்டும் எதுவும் பேசவில்லை. மற்ற விஷயங்களை பேசியிருக்கிறார்.
தர்மயுத்தம் நடக்கும்போதே ஓ.பன்னீர் தன்னை தேடி வந்து சந்தித்ததை பொதுவெளியில் போட்டு உடைத்தார் தினகரன். அதை ஒரு கட்டத்தில் பன்னீரும் ஒப்புக் கொண்டார். ஓ.பன்னீருக்கும் தினகரனுக்குமான தொடர்பு தற்போது வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
ஓ.பன்னீரின் இரண்டாவது மகன் ஜெய பிரதீப் மூலம்தான் ஓபிஎஸ்சுக்கும் தினகரனுக்குமான தகவல் தொடர்பு தொடர்ந்துகொண்டிருக்கிறது. சென்னையில் இருக்கும் மிகப்பெரிய பில்டர் ஒருவர் மூலமாக ஓபிஎஸ்சுக்கும் தினகரனுக்கும் இடையேயான உறவும் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. இந்தப் பின்னணியில்தான், சசிகலா பற்றி எடப்பாடி பழனிசாமி ஜனவரி 19 ஆம் தேதியே தெளிவாககூறிய பின்பும், தேர்தல் பிரச்சாரங்களில் கூறிய பின்னரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் அதுபற்றி ஒரு வார்த்தை கூட வாய் திறக்கவில்லை.
இந்த நிலையில் தினகரன் மூலமாக கிடைத்த அறிவுரைப்படிதான், அமித் ஷாவிடம், ‘சசிகலாவையும் அமமுகவையும் சேர்க்கவில்லை என்றால் நானே தோற்றுவிடுவேன்’ என்று கடைசி அஸ்திரத்தை ஏவியிருக்கிறார் ஓ.பன்னீர்.
இந்த அஸ்திரம் எங்கிருந்து வருகிறது, எதற்காக வருகிறது என்பதைப் புரிந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவிடம் அதுபற்றி தேர்தல் கணக்கு ரீதியாகவே எடுத்துரைத்து அந்த நள்ளிரவிலேயே பன்னீர் மூலமாக தினகரன் ஏவிய அஸ்திரத்தைப் பாதி பாதியாக முறித்துப் போட்டுவிட்டார்.
இதற்குப் பிறகுதான் நாம் ஏற்கனவே தெரிவித்தது போல சசிகலாவுக்கு சென்று சேர வேண்டிய மெசேஜ்கள் எடப்பாடியிடம் இருந்து சென்று சேர… மார்ச் 3 ஆம் தேதி இரவு அந்த முடிவை அறிவித்தார் சசிகலா.
தமிழ்நாட்டு அரசியலில்… பிப்ரவரி 28 ஆம் தேதி இரவுக்கும், மார்ச் 3 ஆம் தேதி இரவுக்கும் தொடர்பில்லை என்று சொன்னால் குழந்தை கூட நம்பாது.
**ராஜ்**�,