தனித்தனியாக ஆய்வு செய்வதால் தனியாகச் செயல்படுகிறார்கள் எனக் கூறுவது ஏற்புடையதல்ல என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று நாட்களாகச் சென்னையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், நிவாரண பொருட்களையும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வருகிறார். இந்நிலையில் இன்று (நவம்பர் 14) தியாகராய நகர், சூளைமேடு உள்ளிட்ட இடங்களை ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், நீங்களும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக ஆய்வு மேற்கொள்வது விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த அவர், “பாதிக்கப்பட்ட மக்களுக்குத்தான் நாங்கள் நிவாரணப் பொருட்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். இதில் எந்தவித பாகுபாடும் கிடையாது. பார்க்கிற பார்வையில் தான் எல்லாம் இருக்கிறது. தனித்தனியாக ஆய்வு செய்தால் தனித்தனியாகச் செயல்படுகிறோம் என்று கூறுவது ஏற்புடையதல்ல. தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணம் கொடுக்கும் பணியைத்தான் கவனிக்க வேண்டும் அதைத் தவிர வேறு எந்த விவாதமும் செய்ய நாங்கள் வரவில்லை ” என்றார்.
2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்துக்குப் பின் அதிமுக எடுத்த நடவடிக்கைகளால் தான் தற்போது மழை பாதிப்பு குறைந்துள்ளது என்றும் கூறினார்.
அதிமுக ஆட்சியில் நடந்த ஸ்மார்ட் சிட்டி ஊழல் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று முதல்வர் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு ஓபிஎஸ் பதிலளிக்கவில்லை.
**-பிரியா**
�,