“ஓ.பன்னீர்செல்வத்துடன் நீண்டகாலம் பயணித்ததே, வேதனையாகவும் வெட்கமாகவும் இருக்கிறது” என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், ஈபிஎஸ் ஆதரவாளருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியினரும், பன்னீர்செல்வம் அணியினரும் ஏதோ எதிரெதிர் கட்சிகளில் இருப்பவர்களைப் போல மாறி மாறி சேற்றை அள்ளி வீசிக் கொள்கிறார்கள்.
அந்த வகையில், ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், நேற்று (ஜூலை 8) சென்னையில் பேட்டியளித்தபோது…
“கிருஷ்ணகிரியில் பால்வளத்துறைக்கு சொந்தமான இடத்தை, கே.பி.முனுசாமியின் மகன் எம்.சதீஷுக்கு 99 ஆண்டுகள் வாடகைக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மூலம் வழங்கி அமைச்சர் காந்தி உதவி செய்துள்ளார். அவருக்கு பெட்ரோல் பங்கையும் காந்தி திறந்து வைத்துள்ளார். அதேபோல அதிமுகவின் ரகசியங்களை திமுகவினரிடம் முனுசாமி கூறிவருகிறார். மொத்தத்தில் அவர் திமுகவின் கைக்கூலியாகவே செயல்பட்டு வருகிறார்” என அதிர்ச்சிப் புகாரைக் கூறினார்.
இதுகுறித்து நேற்று (ஜூலை 8) மாலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடமும் கருத்து கேட்கப்பட்டபோது “இது சம்பந்தமாக எனக்கு எதுவும் தெரியாது” எனப் பதிலளித்திருந்தார். இது எடப்பாடி வட்டாரத்தில் புதிய புயலைக் கிளப்பியதை அடுத்து, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான கே.பி.முனுசாமி இன்று (ஜூலை 9) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “நான் திமுக நிர்வாகிகளிடம் தொடர்பு வைத்துள்ளேன் என்கிற அடிப்படையில் கிருஷ்ணகிரி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய இணையத்தில் இருக்கின்ற பெட்ரோல் பங்கை, 99 ஆண்டுகளுக்கு என் மகன் பெயரில் (எம்.சதீஷ்) நான் லீஸ் எடுத்திருப்பதாகவும், அந்த லீஸ் திமுக ஆட்சியில் எனக்குக் கிடைக்கப்பெற்றதாகவும் ஒரு குற்றச்சாட்டை, கோவை செல்வராஜ் என்மீது வைத்திருக்கிறார். இதை அவர் சொல்லவில்லை. எய்தியவர் உள்ளே இருக்கிறார். எய்தியவர் யாரென்றால் ஓபிஎஸ்.
கோவை செல்வராஜ், அந்த பெட்ரோல் பங்க்கை, 99 ஆண்டுகளுக்கு நான் லீஸ் பெற்றதாக கூறியிருக்கிறார். ஆனால், அந்த பெட்ரோல் பங்க் என்பது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு வகையில் அரசுக்கு வருவாய் வரவேண்டும் என்பதற்காக 2017ல் அந்த இணையத்தில் ஒரு தீர்மானம் போட்டார். அதன்வாயிலாக இந்த பெட்ரோல் பங்க்கை நடத்துவதற்காக ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனோடு இணைந்து அந்த பெட்ரோல் பங்க் ஆரம்பிக்கப்பட்டது. அதை, கடந்த 25ம் தேதி (ஜூன்) இன்றைய அமைச்சராக இருக்கிற காந்தி திறந்துவைத்திருக்கிறார்” என்று சொல்லி, அதற்கான ஆதாரத்தை நிருபர்களிடம் காட்டினார்.
தொடர்ந்து அவர், “இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனும் ஆவினும் இணைந்து செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்த பெட்ரோல் பங்க், 2020 முதல் 2040 வரை 20 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. கோவை செல்வராஜ்க்கு இதுகூட தெரியாமல், மிகப்பெரிய குற்றச்சாட்டை பொதுவாழ்வில் இருக்கும் என்மீது என் நற்பெயரைக் கெடுக்கும் வகையில், அதுவும் ஓபிஎஸ்ஸின் தூண்டுதலின் பேரில் சொல்லியிருக்கிறார்.
இதேபோலத்தான் கொடநாட்டில் நிகழ்ந்த நிகழ்விலும் தன்னுடைய மகனை அவரது இன்னொரு அம்பாக ஏவி, பேட்டி கொடுக்க வைத்தார். எடப்பாடியோடு நான்கரை ஆண்டுக்காலம் துணை முதல்வராக பயணித்த ஓபிஎஸ்ஸுக்கு, அப்போது ஏன் இந்த சிந்தனை வரவில்லை? இப்போது அவர் தவறு செய்துவிட்டு தவறின் காரணமாக பொதுமக்களும், கழகத் தொண்டர்களும் அவரை வெறுத்து ஒதுக்கும் சூழ்நிலையில் எங்களுடைய நற்பெயரை கெடுப்பதற்காக இதுபோன்ற கருத்துகளைச் சொல்கிறார். இது, உங்களுடன் நீண்டகாலம் பயணம் மேற்கொண்ட என்னைப் போன்றவர்களுக்கு வேதனையாக இருக்கிறது. ஏன், பயணித்தோம் என்பதை நினைக்கும்போது வெட்கமாகவும் இருக்கிறது” என்றார்.
“நீங்கள் திமுகவுக்கு கைக்கூலியாக இருப்பதாகவும், அதிமுகவின் ரகசிய தகவல்களை அங்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பதாகவும் கோவை செல்வராஜ் ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளாரே” என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு அவர், “அதிமுகவும் திமுகவும் நீண்டகாலம் பயணிக்கும் சக்திமிகுந்த கட்சிகள். நான், இந்த அதிமுகவில் எந்தவித மாற்றுச் சிந்தனையும் இல்லாமல் 50 ஆண்டுக்காலமாய் இருந்துகொண்டிருக்கிறேன். எத்தனையோ ஏற்றத்தாழ்வுகள் வந்தாலும், எவ்வளவோ அவமானப்பட்டாலும் எம்.ஜி.ஆர். இயக்கத்தில் இருக்கிற இந்த கட்சியில் ஒரு தொண்டனாய் இருக்கிறேன்.
கோவை செல்வராஜ் சொன்னது குறித்து நான் வருத்தப்படவில்லை. அவர் கைக்கூலி. கட்சியில் நீண்டகாலம் உங்களுடன் (ஓபிஎஸ்) பயணிக்கும் என்னை, வேற்றுக் கட்சியில் வந்த, ஆதாயம் தேடுவதற்காக வந்த கோவை செல்வராஜிடம் சொல்லி ஏன் ஊக்கப்படுத்துகிறார் என்று தெரியவில்லை. அவர், தர்மயுத்தம் தொடங்கியபோது ஒன்றாகப் பயணப்பட்டோம். இருவரும் பல்வேறு கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். அப்போதெல்லாம் அவர், ‘அனைத்தும் முனுசாமிக்குத் தெரியும்’ என்பார். அதற்குக்கூட நான், ’ஆமாம்’ என்பேன்.
ஆனால், உட்கட்சிக்குள் இருக்கும் கருத்துப் பரிமாற்றங்களால், மனக்கசப்புகள் வெளியே வரும். அந்த நேரத்தில், அதைக் காட்டிக்கொடுக்கும்போது அதைவிட மோசமான அரசியல்வாதி வேறு யாரும் இருக்க முடியாது. அந்த ரகசியத்தைக் கட்டிக்காத்து வெல்கின்றவன்தான் உண்மையான, அப்பழுக்கற்ற அரசியல்வாதி. இன்றும் சொல்வேன், நாளையும் சொல்வேன். ஓபிஎஸ்ஸோடு பயணித்த சம்பவங்களில் ஒன்றைக்கூட நான் வெளியிட மாட்டேன்.
காரணம், நான் உருவானது எம்.ஜி.ஆரைப் பார்த்து. வளர்ந்தது ஜெயலலிதாவின் கையிலே. எனவே என்றும் இந்த கட்சிக்கு என்னுடைய செயல்பாடுகள் மரியாதை தரும் வகையிலேதான் இருக்கும். எனக்கு தனிப்பட்ட முறையில் அவமானம் வந்தால்கூட ஏற்றுக்கொள்வேன். என்னைப்பற்றி, கோவை செல்வராஜ் பொதுவெளியில் சொல்லிவிட்டார். இதை எத்தனை பேர் நம்பியிருப்பார்கள்? இதுகுறித்து ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேள்வியெழுப்பியபோதுகூட அவரால் இதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. அமைதியாக இருந்துவிட்டார். இதுபோன்ற கருத்துகளை கோவை செல்வராஜ் சொல்வதற்கு, ஓபிஎஸ் உறுதுணையாக இருக்கக்கூடாது என்பதை இந்த நேரத்தில் அவருக்கு ஒரு அன்புக் கட்டளையாக வைக்கிறேன்” என்றவரிடம்,
”ஓபிஎஸ் மீது பல குற்றச்சாட்டுகளை வைக்கும் நீங்கள், ஏன் அவர்மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கவில்லை. ஜெயலலிதா இருந்திருந்தால் எடுத்திருப்பாரே?” எனக் கேள்வியெழுப்பினர்.
அதற்கு அவர், “ஜெயலலிதாவோடு யாரையும் ஒப்பிட முடியாது. ஏனென்றால், அவர் இந்த இயக்கத்தைக் காப்பற்றியவர். எம்.ஜி.ஆருக்குப் பின் தன் ரத்தத்தை வியர்வையாக சிந்தி இயக்கத்தைக் காப்பற்றியவர். அவருடைய கண்ணசைவுக்கு நாங்கள் அனைவரும் கட்டுப்பட்டோம். 16 லட்சமாய் இருந்த தொண்டர்களை, ஒருகோடியாய் மாற்றியவர் அம்மா. அப்படிப்பட்ட ஒரு ஜனநாயக இயக்கமான அதிமுகவிற்கு தலைமையேற்க தற்போதுதான் எடப்பாடி பழனிசாமி வந்துள்ளார். ஜனநாயக முறைப்படிதான் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றார்.
–ஜெ.பிரகாஷ்