கன மழையால் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னையில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி முதல் ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆகியோர் தனித்தனியாக ஆய்வு செய்தனர். அப்போது இருவரும் தனித்தனியாக ஆய்வு செய்வது ஏன் என்று கேள்வி எழுந்தது. இருவருக்குமிடையே பாகுபாடு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
இதற்குப் பதிலளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் நிவாரண பொருட்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதில் எந்தவித பாகுபாடும் கிடையாது. பார்க்கிற பார்வையில் தான் எல்லாம் இருக்கிறது. தனித்தனியாக ஆய்வு செய்தால் தனித்தனியாகச் செயல்படுகிறோம் என்று அர்த்தம் கிடையாது என்று கூறினார்.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் ஒன்றாக இணைந்து இன்று ஆய்வு செய்தனர்.
புவனகிரி மற்றும் பரங்கிப்பேட்டை பகுதிகளில் ஆய்வை மேற்கொண்ட அவர்கள், புவனகிரி தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரிசி, பாய், வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
தொடர்ந்து பரங்கிப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பூவாலை என்ற கிராமத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களைப் பார்வையிட்டனர்.
இதையடுத்து சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
பின்னர் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “பத்து ஆண்டுகள் சிறப்பான ஆட்சி செய்ததால் தான் மக்களுக்குத் தேவையான பொருட்களை வழங்கினோம். உடனுக்குடன் நிவாரணம் வழங்கினோம். ஆட்சிக்கு வந்து பத்து நாளோ அல்லது பத்து மாதமாகவோ இருந்தாலும், மக்கள் பாதிக்காமல் நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை” என்று குறிப்பிட்டார்.
**-பிரியா**
�,