நேற்று முன் தினம் வரை சுமுகமாக செல்கிறது என்று சொல்லப்பட்ட அதிமுக முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் நேற்று (அக்டோபர் 6) மீண்டும் இழுபறி ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் நேற்று முன் தினம் தேனியில் இருந்து சென்னை வந்து சேர்ந்தார். அதுவரை சுமுகமாக இருப்பதாக சொல்லப்பட்ட முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் அடுத்த கட்ட பரபரப்பு பற்றிக் கொண்டது. சென்னை வந்து சேர்ந்ததும் ஒரு வலது சாரி பத்திரிகையாளருடன் பன்னீர் செல்வம் இதுபற்றி விவாதித்தார்.
அந்த சந்திப்புக்குப் பின் ஓபிஎஸ் சின் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டது என்றும், ‘கட்சியின் ஒற்றைத் தலைமையை என்னிடம் கொடுத்துவிட்டு முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும்’ என்றும் பன்னீர் திட்டவட்டமாக தெரிவித்ததாக தெரிகிறது. இதன் அடிப்படையில்தான் நேற்று முழுதும் முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் எடப்பாடி, பன்னீர் இருவரையும் மாறி மாறி சந்தித்தனர்.
அக்டோபர் 7 ஆம் தேதி முதல்வர் வேட்பாளரை அறிவிப்போம் என்று ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில் நேற்று இரவு வரை இது தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்துகொண்டிருப்பதே சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளே கூறுகிறார்கள்.
மேலும் பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு துணை முதல்வர் பன்னீர் செல்வம் அனுப்பிய வாழ்த்துச் செய்திக்கு பிரதமர் செப்டம்பர் 23 ஆம் தேதி பதில் அனுப்பியிருக்கிறார். அந்தபதில் கடிதத்தை நேற்று (அக்டோபர் 6 ) இரவு தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் ஓ.பன்னீர். இதன் மூலம் அவர் ஏதும் சொல்ல வருகிறாரோ என்ற விவாதமும் அதிமுகவில் நடந்து வருகிறது. இப்போது வரை அதிமுகவில் ஆலோசனைகளே தொடர்கின்றன.
**ஆரா**
�,”