இழப்பை ஈடுகட்ட ஆண்களிடம் கூடுதல் கட்டணம்: ஓபிஎஸ் கண்டனம்!

politics

மகளிருக்கான இலவச பயண திட்டத்தால் ஏற்படும் இழப்பு, ஆண்கள் தலையில் சுமத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தப்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றவுடன் பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம் உள்பட ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். மே 8ஆம் தேதி முதல் பெண்கள் நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். தொடர்ந்து, திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளும் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது. இதையடுத்து, பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இலவச பயண திட்டத்தால் போக்குவரத்து துறைக்கு ரூ.1358 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அத்துறையைச் சார்ந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் சமீபத்தில் கூறியிருந்தார்.

இதற்கிடையில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் தொகையை ஈடுகட்டுவதற்காக ஆண்களிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது. அதாவது 5 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயாக உயர்த்தப்பட்டு, ஆண்களிடம் வசூலிக்கப்படுவதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், ஆண்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று(ஆகஸ்ட் 2) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு உள்ளூர் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதும், தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பயணிக்கும் பணிபுரியும் மகளிர், உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்வதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்.

இந்த அறிவிப்பின்படி, நகர பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், சில பகுதிகளில், பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படும் பேருந்துகளில், அந்த இழப்பை ஈடுசெய்ய பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களிடம் குறைந்தபட்ச கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதற்கு முன் 5 ரூபாய் என்பதுதான் குறைந்தபட்ச கட்டணமாக இருந்தது. சட்டத்துக்கு புறம்பாக அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது. இதுகுறித்து போக்குவரத்துக் கழக நிர்வாகத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது, தவறு சீர்செய்யப்படும் என்று பதில் அளித்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

இலவச மகளிர் பயணத்தை அனுமதிக்கும் பேருந்துகள் நகர்ப்புற பேருந்துகள் என்கின்ற போதும், ஆண்களிடம் குறைந்தபட்ச கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற விதிமீறல்கள் சர்வ சாதாரணமாக திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ராமச்சேரி, காஞ்சிப்பாடி, திருவாலங்காடு மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழித்தடங்களில் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.

மகளிருக்கு இலவசப் பயணம் என்று அறிவித்துவிட்டு, அந்த இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கான புதிய உத்திகளை அரசு போக்குவரத்து கழகங்கள் கடைப்பிடிப்பது அரசாணைக்கு எதிரான செயல். இது அரசாங்கத்திற்கு, ஆட்சியாளர்களுக்குத் தெரிந்து நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என்று தெரியவில்லை. இதுபோன்ற கட்டண வசூல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

எனவே, தமிழ்நாடு முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, மகளிருக்கான இலவச பயண திட்டத்தால் ஏற்படும் இழப்பு ஆண்கள் தலையில் சுமத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

**-வினிதா**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.