தன்னையாவது காப்பாற்றிக் கொள்வாரா பன்னீர்? தம்பி நீக்க பின்னணி!

politics

சசிகலாவை திருச்செந்தூரில் நேற்று (மார்ச் 4 ) சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று மார்ச் 5ஆம் தேதி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பு குறித்து இன்று பெரியகுளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ. ராஜா,
“என்னை கட்சியில் இருந்து நீக்க இவர்களுக்கு அதிகாரம் இல்லை. நான் எடப்பாடிக்கு முன்பே கட்சிக்கு வந்தவன். நான் என்ன எதிர்க் கட்சிக்காரரையா போய் பார்த்தேன்? எனக்கு பொதுச்செயலாளர் சசிகலாதான்.

பன்னீர்செல்வம், எடப்பாடி ஆகியோரிடம் சிக்கி கட்சி கடந்த நான்கு தேர்தலில் தோற்று தரைமட்டமாகி விட்டது. சசிகலா மட்டும்தான் அதிமுகவுக்கு தலைமையேற்று நடத்த முடியும். அதனால் அவர்களிடம் போய் கோரிக்கை வைத்தோம்.
எடப்பாடி தன்னைச் சுற்றி ஒரு குழுவையும் பன்னீர்செல்வம் தன்னைச் சுற்றி ஒரு குழுவையும் வைத்துக்கொண்டு அரசியல் செய்து வருகிறார்கள். இவர்களால் அதிமுகவை காப்பாற்ற முடியாது.
நான் செய்தது சரி என்று பல்லாயிரம் அதிமுக தொண்டர்கள் என்னிடம் பேசி வருகிறார்கள். இந்த பிரச்சனைகள் விரைவில் ஒரு முடிவுக்கு வரும்” என்று கூறி இருக்கிறார் ஓ.ராஜா.

இதற்கிடையில் ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் ஓ. பன்னீர்செல்வத்துக்கே தெரியாது என்கிறார்கள் தேனி அதிமுகவினர்.
“இருவரது பச்சை கையெழுத்து போட்டு ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு மாதிரிகளை எடுத்து எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்பேரில் இந்த நீக்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இது புதிதல்ல. ஏற்கனவே புகழேந்தி நீக்கப்பட்டபோது அவருக்கு போன் செய்து பேசிய பன்னீர்செல்வம், ‘எனக்கே விஷயம் தெரியலை அண்ணே. கொஞ்சம் பொறுங்க எல்லாத்தையும் சரி பண்ணிடுவோம்’ என்று கூறினார்.

ஒருங்கிணைப்பாளர் என்ற அடையாளம் பன்னீர்செல்வத்துக்கு இருந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி கட்சி நிர்வாக கட்டமைப்பை தன் கையில் வைத்துக்கொண்டு பன்னீர்செல்வத்திற்கு தெரியாமலேயே பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில் இதுவும் ஒன்று.


இதையெல்லாம் ஓபிஎஸ் எப்படி சகித்துக் கொண்டு இருக்கிறார் என்றே தெரியவில்லை. இன்று தனது தம்பியையே தனக்கு தெரியாமல் நீக்கியிருக்கிறார்கள் என்னும் பொழுது இன்னும் அவர் எந்த ரியாக்ஷனும் வெளிக்காட்டவில்லை.
எடப்பாடியின் தீவிர ஆதரவாளர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பதவி ஏற்க வேண்டும் என்று சமூக தளங்களில் தொடர்ந்து தற்போது வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களில் இரண்டாவது முறையாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் இன்று பெரியகுளம் கைலாசபட்டி வீட்டுக்கு சென்று பன்னீர்செல்வத்தை சந்தித்திருக்கிறார். எடப்பாடியின் கருத்துக்களை அவரிடம் தெளிவாக எடுத்து வைத்துள்ளார்.

இதே போக்கு தொடருமானால் பன்னீர் செல்வத்தையும் நீக்கி எடப்பாடி அறிவிப்பு வெளியிட்டாலும் ஆச்சரியமில்லை. தன்னைச் சுற்றி உள்ளவர்களை காக்கத் தவறிய பன்னீர் இனி தன்னையாவது காப்பாற்றிக் கொள்வாரா?” என்கிறார்கள் தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகளே.
**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *