ஓபிஎஸ் 70: வாழ்த்திய வெங்கையா, மோடி, அமித் ஷா, நட்டா

Published On:

| By Balaji

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் பிறந்தநாளை ஒட்டி இன்று (ஜனவரி 14) பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஓ.பன்னீர் செல்வத்தின் 70 ஆவது பிறந்தநாளை ஒட்டி இன்று காலையிலேயே அவரது வீட்டில் தமிழகம் முழுவதிலும் இருந்து அதிமுக நிர்வாகிகள் பெருமளவில் கூடினார்கள். காலையிலேயே அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அமைப்புச் செயலாளர் நத்தம் விசுவநாதன், மனோஜ் பாண்டியன், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார் உள்ளிட்டோர் ஓபிஎஸ் சின் வீட்டுக்குச் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போனில் தொடர்புகொண்டு ஓபிஎஸ் சுக்கு வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியில், “ ஓ.பன்னீர்செல்வம் ஜி… உங்களுக்கு என் இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த நன்னாளில் மங்களமும், மகிழ்ச்சியும் வரும் ஆண்டுகளில் தினமும் வெளிப்படட்டும். இந்த நன்னாள் அமைதிக்கும் உடல் நலத்துக்கும் மகிழ்ச்சிக்கும் கட்டியம் கூறட்டும். உங்களின் வளமான பல்வேறு அனுபவங்கள் தொடர்ந்து இத்திருநாட்டின் உயர்வுக்கு உதவட்டும்”என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோரும் ஓபிஎஸ் சுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிறந்தநாள், பொங்கல் என இரட்டைக் கொண்டாட்டம் என்பதால் பெருமளவில் தொண்டர்கள் ஓபிஎஸ் வீட்டில் திரண்டனர். வெள்ளிவேல், ஆளுயர மாலை, மலை வாழைப் பழம், தேன் என்று தொண்டர்களின் வாழ்த்துகளோடு பரிசுகளும் பன்னீருக்கு அளித்தனர். அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. கூட்டத்தில் சிலர் வருங்கால முதல்வரே என்றும் பன்னீரை அழைக்கத் தவறவில்லை.

ஓபிஎஸ் சின் பிறந்தநாளை ஒட்டி மோடி, அமித் ஷா, நட்டா என பாஜகவின் டெல்லியின் முக்கியப் பிரமுகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்ததே பன்னீரின் பிறந்தநாள் செய்தி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

**-வேந்தன்**�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share